Sev Mixture Business Ideas - சேவு, மிக்சர் தயாரிப்பு என்பது பெரும்பாலான கிராமங்களில் குடிசைத் தொழிலாக இன்னமும் செய்து வருகின்றனர், கிட்டத்தட்ட இது ஒரு தின்பண்டங்கள் தயாரிப்பு தொழில் தான், பொதுவாக தின்பண்டங்கள் என்பது தமிழகத்தின் தினசரி நடவடிக்கைகளிலேயே இருக்கிறது, ஒரு காபி குடிக்கும் போது, உணவு எடுத்துக் கொள்ளும் போது அருகில் ஒரு தின்பண்டங்களை இன்னுமே தேடிக் கொண்டு தான் இருக்கிறோம்.
அந்த வகையில் டீ, காபிக்கும் இதர உணவு வகைகளுக்கும் ஒரு சிறந்த காம்பினேசன் சிறந்த தின்பண்டம் என்றால் அது சேவு, மிக்சர் மற்றும் சீவல் வகைகளை நிச்சயம் சொல்லலாம், சரி அத்தகைய தின்பண்டங்களை ஒரு தொழிலாக ஆரம்பித்து, அதை நல்ல இலாபத்துடனும் கையாள்வது எப்படி என்பது குறித்து இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
பொதுவாக நீங்கள் குடிசைத் தொழிலாக ஆரம்பிக்கிறீர்கள் என்றால் ஒரு குழாய் விறகு அடுப்பு, சேவு மாஸ்டர், பேக்கிங் கவர்கள், சீலிங் மெசின்கள், லேபல்கள் என அனைத்தையும் தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும், முதலீடு என்று பார்த்தால் இத்தொழிலை ஆரம்பிக்கும் முன்னதாக நீங்கள் ஒரு இரண்டு இலட்சம் வரையில் கையில் வைத்துக் கொள்வது சிறந்ததாக இருக்கும்.
ஒரு நல்ல மாஸ்டர் ஒரு நாளைக்கு 50 முதல் 75 கிலோ வரை சரக்குகளை கையாள்வார், குடிசைத் தொழில் செய்யப்படும் இந்த சேவு, மிக்சர்கள் பேக்கரியில் செய்யப்படும் சேவு, மிக்சர்களை விட சற்றே வித்தியாசப்படும், விலையும் மலிவாக இருக்கும், 1 கிலோ சேவு, மிக்சர், சீவலின் உற்பத்தியாளர் விலை என்பது சந்தையில் 140 ரூபாய், சில்லறை விலைக்கு கிலோ 200 ரூபாய் வரை விற்பார்கள்.
" ஒரு உற்பத்தியாளருக்கு இத்தொழிலில் கிலோவிற்கு 20 ரூபாய் வரை இலாபம் கிடைக்கும், நாள் ஒன்றுக்கு ஒரு 60 முதல் 70 கிலோ சந்தைப்படுத்தினால் கூட மாதம் ரூ 50,000 இலாபமாக உங்கள் கைகளில் நிற்கும் "