Mushroom Farming Business Ideas - உங்கள் வீட்டில் குடில் அமைத்து காளான் விவசாயம் செய்வது எப்படி என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Mushroom Farming Business Ideas - உலகளாவிய அளவில் அதிக அளவில் காளான் பயிரிடுவதிலும், உணவிற்காக பயன்படுத்துவதிலும் சீனா முதல் நிலை வகிக்கிறது, இந்தியாவிற்கு இதில் நான்காவது இடம், இந்தியாவில் காளான் உணவுக்காக பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது, கடந்த 2023 யில் மட்டும் இந்தியாவின் காளான் மார்க்கெட் என்பது 1.20 பில்லியன் அமெரிக்க டாலராக இருக்கிறது.
இந்த அளவிற்கு இந்தியாவில் விரிவடைந்து வரும் காளான் தொழிலை எப்படி வீட்டில் இருந்தே செய்வது என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம், வீட்டில் மாடி இருப்பின் அந்த மாடியில் ஒரு ஓலைக் குடில் கொள்வது நல்லது. குடில் உள்ளே கொஞ்சம் உயரத்தில் கம்புகளை நீள் வாக்கிலும், பக்கவாட்டிலும் கட்டிக் கொள்ள வேண்டும், காளான் வளர்ப்பு பாத்தியை அதில் தான் தொங்க விட வேண்டி வரும்.
வைக்கோல், பாலீத்தீன் கவர் (அளவு 12*24) , நல்ல ஊட்டம் மிக்க சிப்பிக் காளான் விதைகள், நூல் சாக்குகள், இது போக மாடியில் ஒரு நல்ல விதத்தில் அமைக்கப்பட்ட ஓலைக்குடில் இவ்வளவு இருந்தால் காளான் தொழிலுக்கும் பயிரிடலுக்கும் அது போதுமானது ஆக இருக்கும். காளான் பயிரிடலுக்கு வைக்கோல் மிக மிக அவசியம் அது எப்போது ஸ்டாக் இருக்கும் படி செய்து கொள்ள வேண்டும்.
முதலில் அந்த 12*24 அளவுடைய பாலீத்தின் பேக் எடுத்து மிதமான ஈரப்பதத்துடன், கையில் ஈரம் ஒட்டாத அளவிற்கு வைக்கோலை எடுத்து நன்கு அழுத்தி அந்த கவரில் கொஞ்சம் நிரப்ப வேண்டும், பின்னர் சிப்பிக் காளான் விதைகளை அந்த வைக்கோலின் ஓரத்தில் போட வேண்டும். பின்னர் இன்னொரு அடுக்கு அழுத்தமாக வைக்கோல் வைத்து நிரப்பி அதனை சுற்றியும் விதைகளை போட வேண்டும், இவ்வாறாக 4 முதல் 6 அடுக்குகள் ஒரே கவரில் செய்து கொள்ள வேண்டும்.
பின்னர் அதன் முனைப்பகுதியை நன்கு கயிறுகளால் கட்டி கவரை சுற்றி ஒரு பென்சில் அல்லது பேனா வைத்து 9 முதல் 12 துளைகள் போட்டுக் கொள்ள வேண்டும், பின்னர் அப்படியே குடிலுக்குள் அந்தரத்தில் தொங்க விட்டு விடலாம், ஒரு ஊஞ்சல் போன்ற அமைப்பு வைத்து ஒரு அடுக்கில் 3 முதல் 5 வரை கவர்களை கட்டிக் கொள்ளலாம், ஒரு 10*10 குடில் என்றால் இது போல 8 அமைப்பு, 40 கவர்கள் ஏற்படுத்தலாம்.
பின்னர் குடில்களின் உள் சுவர்களை சுற்றி நூல் சாக்குகள் கட்டப்பட்டு இருக்க வேண்டும், குடில் முழுக்க அவ்வாறு நூல் சாக்குகளாக இருப்பது அவசியம், அதை விட அந்த சாக்குகள் எப்போதும் ஈரப்பதத்துடன் இருக்குமாறு தண்ணீர் தெளித்துக் கொண்டே இருக்க வேண்டும், வெயில் காலம் என்றால் ஒரு நாளுக்கு நான்கு முறை, குளிர் காலம் என்றால் 2 முதல் 3 முறை தண்ணீர் தெளிக்கலாம்.
அந்த சாக்கின் ஈரப்பதம் குடிலுக்குள் வெப்பநிலையை நிலையாக வைத்து இருக்கும், காளான் வளர்ப்பிற்கு அந்த ஈரப்பதமான சூழல் என்பது மிக மிக முக்கியம், அதற்கு தான் நூல் சாக்கு குடிலின் உள் சுவர்களில் நிரப்பப்படுகிறது, குறைந்தபட்சம் விதைத்து 25 நாட்களில் அறுவடை செய்யலாம், உங்களுடைய வேலை என்பது எப்போதும் குடிலுக்குள் ஈரப்பதத்தை நிலையாக இருக்க செய்வது மட்டும் தான்.
பெரிய செலவுகள் எல்லாம் இல்லை, ஒரு பாக்கெட் விதைப்பிற்கு வெறும் 40 முதல் 60 ரூபாய் தான் உங்கள் செலவு, 100 சதவிகிதம் உங்கள் முதலீடு என்றால் 300 சதவிகிதம் ரிட்டன்ஸ், இது தான் காளான் வளர்ப்பில் பலரும் ஈடுபடுவதற்கான ஒரு பிடிப்பு, விவசாய நிலத்தை உழுவது போல பெரிய வேலை எல்லாம் இல்லை, ஒரு 3 மணி நேரத்தில் விதைப்பை முடித்து விட்டு அடுத்து உங்களுக்கு சாக்குகளின் மேல் தண்ணீர் தெளிப்பது மட்டும் தான் வேலை.
" பொதுவாக 200 கிராம் சிப்பிக்காளான் சந்திகளில் ரூ 50 முதல் 60 ரூபாய் வரை விற்கப்படுகிறது, ஒரு நாள் ஒன்றுக்கு ஒரு 4 முதல் 5 கிலோ சந்தைப்படுத்தினாலும் கூட தினசரி ரூ 1000 முதல் 1500 வரை சம்பாதிக்கலாம், குடில்களை, வளர்ப்பை, மார்க்கெட்டிங்கை விரிவு படுத்தும் போது இத்தொழிலில் இலட்சங்களில் கூட இலாபம் பார்க்க முடியும் "