இந்தியாவில் தொழில் துவங்க விரும்பும் அமெரிக்காவை சேர்ந்த பிரபல டெஸ்லா நிறுவனம் தான் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யும் எலக்ட்ரிக் வாகனங்களின் மீதான இறக்குமதி வரியை குறைக்க வேண்டி மத்திய அரசிடம் கோரிக்கை வைத்து வந்தது. இந்நிலையில் உள்நாட்டு வாகன தயாரிப்பு நிறுவனங்கள் பலவும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து குரல் கொடுத்து வந்தனர். வெளிநாட்டு நிறுவனத்திற்கு இறக்குமதி வரியில் சலுகை அறிவித்தால் அது உள்நாட்டில் முதலீடு செய்துள்ள தொழில் நிறுவனங்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் மத்திய அரசின் FAME கொள்கைக்கு உடன்பாடாக இருக்காது என்றும் கருத்து தெரிவித்து வந்தனர்.

டெஸ்லா நிறுவனம் அப்படி எவ்வளவு தான் இறக்குமதி வரியில் சலுகை கேட்கிறது?

40000 டாலருக்கு குறைவான மதிப்பு கொண்டு முழுமையாக தயாரித்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு அதன் அளவு, விலை, காப்பீடு, சரக்கு கட்டணம் ஆகியவற்றின் அடிப்படையில் 60% லிருந்து 100% வரை இருக்குமதி வரி விதிக்கப்படுகிறது. ஆனால் டெஸ்லா நிறுவனம் மின்வாகனங்களுக்கான இறக்குமதி வரியை மேற்கூறிய எந்த அம்சத்தையும் கருத்தில் கொள்ளாமல் ஒரே சீராக 40% என வசூலிக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தது. இதனாலேயே டாடா உள்ளிட்ட பல உள்நாட்டு வாகன உற்பத்தி நிறுவனங்கள் எதிர்ப்பு குரல் கொடுத்து வருகின்றனர்.

அதேபோல் மத்திய அரசு டெஸ்லா நிறுவனத்தின் கோரிக்கையை ஏற்று இறக்குமதி வரியை சீராக 40% என குறைத்தால் இந்தியாவில் விற்பனை, சேவை, மின்னேற்ற உள்கட்டமைப்பு போன்றவற்றில் அதிக அளவில் தமது நிறுவனம் நேரடி முதலீடு செய்யும் என்றும் டெஸ்லா தெரிவித்திருந்தது.

இத்தகைய சூழ்நிலையில் நமது மத்திய கனரக தொழில்துறை அமைச்சகம் “முதலில் உற்பத்தியை துவங்குங்கள் அதன்பிறகு வரி சலுகை பற்றி பரிசீலனை செய்யலாம்” என்று டெஸ்லா நிறுவனத்திடம் எழுத்துபூர்வமாக பதில் அளித்துள்ளதாக தெரிகிறது. உற்பத்தி துவங்கப்பட்ட பிறகு, உள்நாட்டு நிறுவனங்களுக்கு பாதகம் விளைவிக்காத வகையில் தேவைப்படும் சலுகைகள் வழங்குவது குறித்து ஆலோசிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்த பதிலுக்குப்பிறகு டெஸ்லாவின் நிலைப்பாடு என்ன என்பதும் மத்திய அரசின் இறக்குமதி வரி குறித்த நிலைப்பாடும் காத்திருந்து பார்த்தால் தான் தெரியும்.