சவுதி அரேபியா நாட்டில் பொது முதலீட்டு நிதி நிறுவனம் ஆனது ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்தில் கிட்டத்தட்ட ரூ.9555 கோடி ரூபாயை முதலீட்டு செய்து 2.04% பங்கினை கைப்பற்றவுள்ளதாக அறிவித்துள்ளது. இதுவே இந்திய ரீடைல் சந்தையில் ஒரு பன்னாட்டு நிறுவனம் செய்துள்ள பெரிய முதலீடாக இருக்கிறது.

ரிலையன்ஸ் நிறுவனம் தன்னுடைய ரீடைல் வர்த்தகப் பங்கினை விற்பனை செய்து பின்னர் முதலீட்டை ஈட்ட வேண்டும் என திட்டமிட்ட நாள் முதல் நிறைய பன்னாட்டு நிறுவனங்கள் இதில் முதலீடு செய்ய வேண்டும் என ஆர்வமாக இருந்த சமயத்தில், தற்சமயம் சவுதி சவரின் PUBLIC INVESTMENT FUND நிறுவனம் ரூ.9,555 கோடி மதிப்பில் முதலீடு செய்வதற்காக ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் மூலமாக, ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்திடம் இருந்து 2.04% பங்கினை பெறவுள்ளது. ரிலையன்ஸ் ரீடைலில் இந்நிறுவனம் 9-வது நிறுவனமாக முதலீட்டை செய்து 2.04% பங்கினை கைப்பற்றியுள்ளது குறிப்பிடதக்கது. மேலும், ரிலையன்ஸ் நிர்வாகம் ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்தில் கிட்டத்தட்ட 10.5% பங்கினை விற்பனை செய்து ரூ.47,265 கோடியை முதலீட்டாகப் பெறுவதற்கு ஒப்பந்தம் செய்துள்ளது.

இதற்கு முன்பாக அமெரிக்க முதலீட்டு நிறுவனமான சில்வர் லேக் நிறுவனத்தின் ரூ.7,500 கோடி அளவிலான முதலீடு ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்தின் மிகப்பெரிய அளவிலான முதலீட்டாக இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் தற்சமயம் சவுதி நிறுவனத்தின் ரூ.9,555 கோடி மதிப்புடைய முதலீட்டின் மூலமாக அமெரிக்க நிறுவனத்தின் முதலீடு 2-ம் இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தன்னுடைய 33% பங்குகளைக் GOOGLE, FACEBOOK, INTEL, QUALCOMM உள்ளிட்ட 14 பன்னாட்டு நிறுவனங்களிடம் விற்பனையை செய்து கிட்டத்தட்ட 20 பில்லியன் டாலர் மதிப்புடைய முதலீட்டை பெற்றது குறிப்பிடத்தக்கது.

Author – Gurusanjeev Sivakumar