முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றான ஐசிஐசிஐ வங்கி, MSME-ஐ மையமாகக் கொண்ட டிஜிட்டல் பேங்கிங் செயலியான InstaBIZ-ஐ இயங்கக்கூடியதாக மாற்றியுள்ளது என்று சமீபத்தில் தெரிவித்துள்ளது. வணிகர்கள் தங்கள் கணக்குகளை மற்ற வங்கிகளுடன் எளிதில் இணைக்கும் வகையில் இந்த செயலி செயல்பட்டு வருகிறது.

முக்கிய வர்த்தகர்கள் – மளிகை கடைகள், பல்பொருள் அங்காடிகள், உணவகங்கள், ஸ்டேஷனரி கடைகள், மருந்தகங்களின் உரிமையாளர்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், தொழில் வல்லுநர்கள் ஆகியோர் வாடிக்கையாளர்களிடமிருந்து பணம் பெறுவதற்கு தங்கள் UPI ஐடி மற்றும் QR குறியீட்டை பயன்பாட்டில் உருவாக்கலாம். அதே போல் வணிகர்கள் தேவைப்படின் POS சாதனத்திற்க்கும், பணம் செலுத்தியதை உறுதி செய்யும் குரல் செய்தி அனுப்பும் சாதனத்திற்கும் டிஜிட்டல் முறையில் விண்ணப்பம் செய்யலாம் என்று வங்கி கூறியது.

“MSME பிரிவின் பெரும்பகுதி சில்லறை வணிகர்களை மையமாகக் கொண்டுள்ளது. ஏறக்குறைய 2 கோடிக்கும் மேல் வணிகர்கள் நாடு முழுவதும் உள்ளனர். அவர்களின் வணிகத்தை எளிமையாக்கும் வகையில் செயல்பாடுகளை செய்து அவர்களுக்கு ஆதரவளிப்பதே இவ்வங்கியின் முயற்சி” என்று ICICI வங்கியின் செயல் இயக்குனர் அனூப் பாக்ச்சி தனது அறிக்கை ஒன்றில் தெரிவித்தார். வணிகர்கள் வங்கிகளின் கிளைக்குச் செல்லவோ, எந்த ஆவணத்தையும் பதிவேற்றவோ தேவையில்லை என்பதால், அனைத்தும் KYC செயல்முறை மூலம் ஆதரிக்கப்பட்டு இயங்குகிறது.

இந்த InstaBIZ செயலியில் MSME கள் ரூ.15 லட்சம் வரை ஓவர் டிராஃப்ட் வசதி பெற முடியும். டிஜிட்டல் முறைகள் மூலம் நிதிகளை மொத்தமாக சேகரிக்கலாம், பணம் செலுத்துதல், தானியங்கி வங்கி சமரசம், ஏற்றுமதி-இறக்குமதி பரிவர்த்தனைகளில் உள்ளீடு மற்றும் வெளிச்செல்லுதல் ஆகியவற்றையும் பெறமுடிகிறது. ஜனவரியில் ICICI வெளியிட்ட 3-ம் காலாண்டு முடிவுகளின் படி அதன் SME கடன் போர்ட்ஃபோலியோவை ஆண்டுக்கு ஆண்டு (YoY) 34.2% உயர்த்தி ரூ.36,353 கோடியாக கொண்டுள்ளது என்று தெரிகிறது.

InstaBIZ மற்றும் வங்கியின் மற்ற டிஜிட்டல் முயற்சிகளான Merchant Stack, Trade Online மற்றும் EasySign மூலம் விநியோக ஆவணங்களை மின்-கையொப்பமிடுதல் ஆகியவற்றின் பின்னணியை கொண்டு இந்த சீரிய வளர்ச்சி ஏற்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.