பணமதிப்பிழப்பு, பொருளாதாரத்தில் ஏற்பட்ட மந்தநிலை, மத்திய அரசின் GST கொள்கை,  கொரோனா பெருந்தொற்று இவை அனைத்தும் நாட்டின் அனைத்து தொழில் நிறுவனங்களுக்கும் சவாலாக அமைந்துள்ள நிலையில் முன்னணி தொழில் நிறுவனங்கள் பலவும் தங்களது செயல்பாடுகளை முடக்கம் செய்வது மற்றும் உற்பத்தி நிறுத்தம் போன்ற நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

இதில் ஆட்டோமொபைல் நிறுவனங்களும் அடக்கம். இந்நிலையில் அமெரிக்காவின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான Ford விற்பனையில் பெரும் இழப்பையும் சரிவையும் சந்தித்து வருகின்ற காரணத்தால் அது சென்னை (மறைமலைநகர்) மற்றும் குஜராத்தில் உள்ள தனது ஆலைகளை மூடுவதாக அறிவித்திருந்தது. 1995-ஆம் ஆண்டில் இந்தியாவில் துவங்கப்பட்ட தொழில் ஆலைகளை நடப்பு ஆண்டு மற்றும் அடுத்த ஆண்டில் மூடப்போவதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் குஜராத்தின் சனந்த் நகரில் தொழிற்சாலைகளை நிறுவி, ‘Figo, Ecosport, Aspire’ உள்ளிட்ட பல வாகனங்களை தயாரித்து வருகிறது.

இந்தியா போன்று வளர்ந்து வரும் சந்தைகளில் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் முதலீடு செய்யும் பல வர்த்தக நிறுவனங்கள் பல்வேறு காரணங்களால் இழப்பையும், நஷ்டத்தையும் சந்திக்கும்போது இது போன்ற முடிவுகள் எடுக்கும் சூழ்நிலை அமைகிறது.

உற்பத்தியை நிறுத்தினாலும் Ford இந்தியா வாடிக்கையாளர் சேவை, உதிரிபாகங்கள் மற்றும் வாரன்டி சப்போர்ட் ஆகியவை தொடர்ந்து செயல்படும் என்று அறிவித்துள்ளது. அதே போல் வாகனங்கள் இருப்பில் உள்ள வரை விற்பனை செய்யப்படும் என்றும் கூறியுள்ளது.

Ford நிறுவனத்தின் இந்த அறிவிப்பு ஏற்கனவே விற்பனை இல்லாமல் இருக்கும் டீலர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. மேலும் அந்த ஆலைகளில் பணியாற்றும் 4000-க்கும் மேற்பட்ட நேரடி பணியாளர்களும், டீலர் -ரீடெயில் கம்பெனிகளில் பணிபுரியும் 40000-க்கும் மேல் உள்ள பணியாளர்களும் வேலை வாய்ப்பை இழக்கும் சூழல் உருவாகியுள்ளது.  பல்வேறு விஷயங்களை ஆராய்ந்த பிறகு வேறு வழியில்லாமல் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக நிர்வாகம் அறிவித்திருந்தது.

நேற்று தொழிற்சங்கத்தினருடன் மறைமலை நகரில் Ford நிறுவனம் பேச்சு வார்த்தை நடத்தியது. மேலும் நமது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் அதிகாரிகளுடன் இன்று தலைமை செயலகத்தில் இது சம்பந்தமாக ஆலோசனை நடத்தவிருப்பதாக தெரிகிறது.