விவசாயத்தில் காலத்தும் அழிக்க முடியாத பல பொக்கிஷங்களை தன்னகத்தே கொண்டது நமது இந்திய பாரம்பரியம். என்ன குறை கொண்டோம் நாம் நம் தாய் நாட்டில். பழங்காலம் தொட்டு நம் நாட்டு விவசாயிகள் ஆழ்ந்த அறிவு, அனுபவங்களை இம்மண்ணில் விதைத்து கொண்டே தான் வருகின்றனர். தற்போதைய புதிய தலைமுறையினர், அதன் பலன்களை உணர்ந்து அவற்றை பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். அக்காலத்து விவசாயிகளால் கடைப்பிடிக்கப்பட்ட விவசாய முறைகள் தற்சமயம் “அங்கக வேளாண்மை” என்ற புதிய முறையாக பிரகாசிக்க ஆரம்பித்துள்ளது.

ஒவ்வொரு மனிதனும் அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ளும் முக்கிய பொருள் அரிசி. இந்தியாவில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட நெல் வகைகள் இருந்துள்ளதாக நமது வரலாறு கூறுகிறது. இந்தியாவில் ஏற்பட்ட  பசுமைப்புரட்சியின் விளைவாக பல பாரம்பரிய நெல் ரகங்கள் அழிந்துவிட்டன.

நமது பாரம்பரிய அரிசியின் மேண்புகளை நன்கு உணர்ந்த டாக்டர் ஆர்.எச்.ரிச்சாரியா (கட்டக் மைய அரிசி ஆராய்ச்சி நிறுவன இயக்குநர்) அதிக விளைச்சல் தருவதும் யாருக்கும் தீங்கு விளைவிக்காததும் நமது பாரம்பரிய அரிசியே என்று கூறி I.R.R ரக வீரிய நெல் விதைகளுக்கு அனுமதி மறுத்தார். ஆனால் அவர் கருத்து பயனற்று போனது. அவர் இறந்து பல ஆண்டுகளுக்குப் பிறகே ரசாயன உரத்தால் ஏற்பட்ட பின்விளைவுகள் மக்களால் உணரப்பட்டது. பிறகு இயற்கை விவசாயம், பாரம்பரிய விதைகள் பாதுகாப்பு போன்ற பல முயற்சிகள் தனி நபர்களாலும், அமைப்புகளாலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மறைக்கப்பட்ட நமது பாரம்பரிய விவசாயத்திற்கு புத்துயிர் அளிக்கும் விதத்தில் விவசாயிகள் பலரும் பல அறிய முயற்சிகள் எடுத்துக்கொண்டுதான் வருகின்றனர்.

உணவுக்கு மட்டுமின்றி மருத்துவ குணம் கொண்டதாகவும் விளங்குகிறது நமது பாரம்பரிய நெல் வகைகள் – அன்னமிளகி, அறுபதாங்குறுவை, பூங்கார், கேரளசுந்தரி, குழியடிச்சான், குள்ளங்கார், மைசூர்மல்லி, குடவாழை, காட்டுயானம், காட்டுப்பொன்னி, வெள்ளைக்கார், மஞ்சள் பொன்னி, கருப்புச் சீரகச்சம்பா, கட்டிச்சம்பா, குருவிக்கார் என்று பாரம்பரிய நெல் வகைகள் பெயர் பட்டியல் நீண்டு கொண்டே செல்லும். ஒவ்வொரு ரகமும் பிரத்தியேக குணமும், மணமும் கொண்டது. 

பாரம்பரிய நெல் விதைகளை மீட்டெடுக்கும் நல்முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே உள்ள பெண் விவசாயிகள். மக்கள் நோயின்றி வாழ வழி ஏற்படுத்தி கொடுக்கும் உயர்ந்த லட்சியத்துடன் அவர்கள் மேற்கொண்டுள்ள இப்பணி சிறக்க நாம் வாழ்த்துவோம். நம் நாட்டில் பெண்ணை சக்தியின் வடிவமாகப் பார்க்கின்றோம். பாரதி கண்ட புதுமை பெண்களாய் விளங்குகின்றனர் மணக்காடு கிராமத்தைச் சேர்ந்த பெண்கள். இயற்கை விவசாயத்தின் மீது கொண்ட ஈர்ப்பால் சித்ரா என்பவர் இந்த கிராமத்தைச் சேர்ந்த 50 பெண்களுடன் இணைந்து “மகளிர் விவசாய குழுவை” ஏற்படுத்தியுள்ளார். இவர்கள் 15 ஏக்கர் நிலத்தில் சீரக சம்பா, மிளகு சம்பா, குழிவெடிச்சான் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் ரகங்களை இயற்கை உரங்களைப் பயன்படுத்தி சாகுபடி செய்து வருகின்றனர்.

இந்த நெல் வகைகளின் தரத்தை அனைவரும் உணரும் வகையிலும், தங்கள் வருமானம் சிறக்கவும் இந்த அரிசிகளை கொண்டு பல்வேறு தின்பண்டங்களை செய்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றியுள்ளனர். இது அவர்களுக்கு நல்ல வருமானத்தை ஈட்டித்தருகிறது.

இந்த சாகுபடி முறையில் அனைத்து பணிகளையும் பெண்களே செய்கின்றனர். உரம், பூச்சிக்கொல்லி மருந்து போன்ற அணைத்தும் இயற்கை முறையிலேயே இருக்கும்படி பார்த்துக்கொள்கின்றனர்.

இன்னும் பல பாரம்பரிய நெல் வகைகளை கண்டறிந்து அவற்றையும் சாகுபடி செய்யவும், அதில் பெண்கள் மற்றும் இளைஞர்களை ஈடுபடுத்தும் நோக்கத்துடனும் இப்பெண்கள் உள்ளனர். இவர்களை போன்ற பெண்கள் நமது நம்பிக்கை நட்சத்திரங்கள்.