சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.வைத்தியநாதன் அவர்கள் உத்தரவின்படி அனைத்து புதிய வாகனங்களுக்கும் ‘பம்பர் டூ பம்பர்’ என்ற 5 ஆண்டுகளுக்கான காப்பீடு செப்டம்பர் 1ஆம் தேதி முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும், வாகன உரிமையாளர், ஓட்டுனர், பயணி என அனைவரையும் உள்ளடக்கும் வகையில் இந்த காப்பீடு இருக்க வேண்டும் எனக்கூறி தமிழக போக்குவரத்துத்துறை கூடுதல் தலைமை செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்த தீர்ப்பு வர காரணமாக இருந்தது கடந்த 2016-ஆம் ஆண்டு ஒகேனக்கல்லில் நடந்த ஒரு சாலை விபத்து. இந்த சாலை விபத்தில் சடையப்பன் என்பவர் மரணமடைந்தார். அவரின் குடும்பம் இழப்பீடு கேட்டு தொடர்ந்த வழக்கில் ஈரோடு மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு தீர்ப்பாயத்தின் தீர்ப்பை எதிர்த்து நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

அவ்வழக்கை விசாரிக்கும்போது சடையப்பன் வாகன ஓட்டுனராக பதிவு செய்யப்பட்டிருந்தாலும் விபத்து ஏற்பட்ட சமயத்தில் அவர் வாகனத்தை இயக்கவில்லை என்று உறுதியானது. ஆகவே ஓட்டுநர் அல்லாத ஒருவர் இறப்பிற்கு அனுமதிக்கப்பட்ட ஒரு லட்ச ருபாய் மட்டுமே இழப்பீடாக வழங்க முடியும் என்று இன்சூரன்ஸ் நிறுவனம் தெரிவித்தது.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி இவ்வழக்கின் தீர்ப்பை அறிவித்ததோடு மட்டுமன்றி புதிய வாகனத்தை வாங்கும் போது காப்பீடு நடைமுறைகளை பற்றி முழுமையாக தெரிந்து கொள்வதில்லை. அதே போல் விற்பனையாளர்களும் காப்பீடு விவரங்களை முழுமையாக வாடிக்கையாளர்களுக்கு தெரிவிப்பதில்லை.

ஆகவே வாகன உரிமையாளர், ஓட்டுனர், பயணி என அனைவரையும் உள்ளடக்கும் வகையில் வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல் விற்கப்படும் அனைத்து புதிய வாகனங்களுக்கும் ‘பம்பர் டூ பம்பர்’ என்ற 5 ஆண்டு காப்பீடு செய்வது கட்டாயமாக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.இதனால் புதிய வாகனங்கள் விலையில் 8-10% வரை அதிகரிக்கும். இந்த விலை உயர்வை நுகர்வோர் ஏற்றுக்கொள்ள வேண்டி வரும்.

இரு சக்கர வாகனங்கள் விலையில் 5 – 6 ஆயிரம் ரூபாய் எனவும், ஆரம்ப நிலை கார்களின் விலையில் 50 ஆயிரம் ரூபாய் வரையிலும், SUV வாகனங்கள் விலையில் 2 லட்சம் ரூபாயும் அதிகரிக்கும் என அறியப்படுகிறது.இந்த விலை ஏற்றம் நுகர்வோருக்கு கூடுதல் பளு என்றாலும் கூட இந்த காப்பீடு மூலம் வாகன உரிமையாளர், ஓட்டுனர், பயணி என அனைவரும் பாதுகாக்கப்படுவர் என்ற சூழல் ஏற்பட்டுள்ளது.