மேக் இந்தியா திட்டத்தின் கீழ் அப்ரமேயா ராதாகிருஷ்ணா மற்றும் மயாங்க் பித்வட்கா ஆகியோரால் இணைந்து பெங்களூரில் நிறுவப்பட்ட மைக்ரோ பிளாக்கிங் தளம் ‘கூ’ என்ற பெயரில் 2020-ம் ஆண்டு தொடங்கப்பட்டு 15 மாதங்கள் நிறைவு பெற்றுள்ளது.

பிரபல சமூக வலைத்தளமான ட்விட்டருக்கு மாறாக இந்தியாவிலேயே உருவாக்கப்பட்டுள்ள இந்த ‘கூ’ ‘ஆப் குறைந்த காலத்தில் மிகவும் பிரபலமாகி உள்ளது. மத்திய அமைச்சர்கள், பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், அரசாங்கத் துறைகள் என பலரும் இந்த சமூக வலைதளத்தில் இணைந்து உபயோகித்து வருகின்றனர். மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய சமூகவலைதளக் கொள்கையில் உடன்பாடு இல்லாத ட்விட்டர் அந்தப் புதிய கொள்கையை தொடர்ந்து தவிர்த்து வந்தது. பல விமர்சனங்கள் ட்விட்டர் நிறுவனத்திற்கு எதிராக எழுந்த சூழ்நிலையில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட ‘கூ’ ஆப் மிக அதிக யூசர்களை வெகு விரைவில் பெற்றது.

15 மாத காலத்தில் சுமார் 1 கோடி யூசர்கள் இந்த செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகின்றனர். இந்த வளர்ச்சி ‘கூ’ செயலி நிறுவனர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மிகக் குறுகிய காலத்தில் ஏற்பட்ட வளர்ச்சிக்கு ஒரு காரணம், இந்த புதிய செயலி இந்தியாவின் பிராந்திய மொழிகளான ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி, அஸ்ஸாமிஸ், வங்காள மற்றும் ஆங்கிலம் போன்ற 8 மொழிகளில் செயல்படுகிறது. வெகு விரைவில் குஜராத்தி மற்றும் பஞ்சாபி மொழிகளிலும் கிடைக்கப்பெறும் என்று இந்நிறுவனம் கூறியுள்ளது. அடுத்த ஆண்டு இறுதிக்குள் 10 கோடிக்கும் மேல் யூசர்களை பெற்றிருக்கவேண்டும் என்பதே தமது இலக்கு என்று இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

தங்கள் இலக்கில் வெற்றி பெற தேவைப்படும் அனைத்து முயற்சிகளையும் இந்நிறுவனம் தீவிரமாக மேற்கொள்ளும் என்றும் இந்த இலக்கு திட்டமிட்டபடி சென்றால் அடுத்தடுத்த சில ஆண்டுகளில் 500 மில்லியன் யூசர்களை பெட்ரா சமூக வலைத்தளமாக ‘கூ’ இருக்கும் என்று ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.