மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் இந்திய அரசின் மிக முக்கிய துறைகளுள் ஒன்றாக செயல்பட்டு வருகிறது. தொழாளர்களின் நலன், சமூகப்பாதுகாப்பு, மேம்பாடு என அனைத்து விதத்திலும் தொழிலாளர்களுக்காகவே இந்த துறை இயங்குகிறது.

அமைப்பு சார்ந்த மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் நலன் காக்க பல்வேறு சட்டங்கள் இயற்றப்பட்டு அவை தகுந்த விதிமுறைகளின்படி நடைமுறை படுத்தப்படுகிறது.நம் நாட்டில் அமைப்பு சாரா தொழிலாளர்கள் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது.

இந்திய பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்காற்றும் இவர்களின் வாழ்வாதார மேம்பாடு, பொருளாதார வளர்ச்சி, பாதுகாப்பு போன்றவற்றை உறுதிப்படுத்த அரசு பல திட்டங்களை செயல்படுத்தினாலும் அது அவர்களை சரியாக சென்று சேர்வதில்லை என்ற கருத்து பொதுவாக நிலவி வருகிறது. யார் இந்த அமைப்பு சாரா தொழிலாளர்கள்? கட்டுமானத் தொழிலாளர்கள், புலம்பெயர் தொழிலாளர்கள், சாலையோர விற்பனையாளர்கள் எனப் பலர் உண்டு.

இவர்களின் பணி நிலவரம் என்ன, எவ்வளவு தொழிலாளர்கள் உள்ளனர், அவர்களின் நிலை குறித்த சரியான புள்ளி விவரங்கள் எதுவும் இதுவரை இல்லை. அதற்காக மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் eSHRAM என்ற பெயரில் புதிய போர்ட்டல் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.இந்த போர்ட்டலில் 38 கோடி அமைப்பு சாரா தொழிலாளர்களைப் பதிவு செய்வது என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதற்கு 14434 என்ற டோல் ஃபிரீ நம்பரும் வழங்கப்பட்டுள்ளது. இதில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணப்படும். தொழிலாளர்கள் தங்களது பெயர், முகவரி, அவர்களது திறன் விவரம், பணி விவரம், குடும்ப விவரங்கள், ஆதார் எண், வங்கிக் கணக்கு ஆகிய விவரங்களை

இந்த போர்ட்டலில் பதிவுசெய்ய வேண்டும். eshram.gov.in என்ற இணையத்தளத்தின் உள் சென்று ‘Register on e-SHRAM’ என்பதை கிளிக் செய்து ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண்ணைப் பதிவிட்டு, கேப்ட்சா குறியீட்டையும் உள்ளிட்டால், கொடுக்கப்பட்ட மொபைல் எண்ணிற்கு ஒரு OTP வரும். அந்த OTP எண்ணை பதிவிட்டு தொடர்ந்து மற்ற விவரங்களையும் பூர்த்திசெய்தால் ஒரு அமைப்பு சாரா தொழிலாளியின் பெயர் மற்றும் விவரம் இத்திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டுவிடும்.

ஆதார் நம்பர், வங்கிக் கணக்கு எண் போன்றவை அவசியம்.அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை அவர்களுக்கு நேரடியாகச் சென்று சேர்க்க உதவுவதே இதன் உன்னத நோக்கம்.Source :