ஜெர்மனியில் நடைபெற்ற IAA மொபிலிட்டி ஷோ 2021-ல்  மெர்ஸிடெஸ் பென்ஸ் நிறுவனம் பார்வைக்கு வைத்திருந்த அதிநவீன கார் பார்வையாளர்கள் அனைவரின் ஏகோபித்த வரவேற்பை பெற்றது. “எங்களது இந்த அதிநவீன கார் விஷன் ஏவிடிஆர் (Vision AVTR) என்ற கருத்துப்படி அனைவரின் எதிர்பார்ப்புக்கும்  அப்பாற்பட்டு சிந்திக்கும் திறனையும் கொண்டது” என்று பெருமையுடன் கூறிக்கொள்கின்றனர்  மெர்ஸிடெஸ் பென்ஸ் நிறுவனத்தினர்.

மனித எண்ணத்தை வாகனத்தின் டிஜிட்டல் டாஷ்போர்டுடன் தொடர்புபடுத்தி வாகனத்தை இயங்க வைக்கும் தொழில் நுட்பம் இதில் அமைக்கப்பட்டுள்ளது. பிரெயின் கம்பியூட்டர் இன்டர்ஃபேஸ் (BCI-Brain Computer Interface) என்னும் தொழில்நுட்பத்தின் மூலம் நம் மூளையின் எண்ண அலைகள் சிக்னலாக அனுப்பப்படுகின்றன. அதனால் தொடுதிரையை தொடாமலும் பொத்தானை அழுத்தாமல் இந்த வாகனத்தை இயக்க முடிகின்றது. BCI சாதனத்தில் அணியக்கூடிய வகையில் உள்ள மின்முனைகள் வாகனம் இயக்குபவரின் தலையின் பின்பகுதியில் பொருத்தப்படும். அதன் மூலமாக அவர் எண்ண ஓட்டங்களுக்கு ஏற்ப அவர் அந்த வாகனத்தை இயக்க முடியும்.

காரில் பயணம் செய்பவர்களது இதயத்துடிப்பைக் கண்டறியும் வசதி, சூரிய மின்சக்தியை உபயோகிக்கும் வசதி ஆகியவையும் இதில் பொருத்தப்பட்டுள்ளது என தெரிகிறது.

இந்த வாகனத்தை இயக்குவதற்கு அதிக கவனமும் சிந்தனை ஒருங்கிணைப்பும் தேவை என்பதால் அதிக தொலைவு பயணிப்பதற்கு நிச்சயம் இது ஏற்புடையது அல்ல. இது ஒரு அறிய சாதனையாக இருந்த போதிலும் பொது பயன்பாட்டிற்கு இன்னும் வரவில்லை. எப்படியும் இது பென்ஸ் நிறுவனத்தின் சிறந்த சாதனை என்பதில் ஐயமில்லை.