பாரதி கண்ட புதுமை பெண்கள் நாங்கள். இம்மண்ணில் பிறந்த யாம் வீட்டுக்குள் அடைந்து கிடைக்க பிறக்கவில்லை, சாதிக்கவே பிறந்துள்ளோம் என்று சூளுரைக்கும் வகையில் ஒவ்வொரு நாளும் பெண்களின் வளர்ச்சி நம் கண்முன்னே பிராகாசமாய் தெரிகின்றது. பெண்மையின் வளர்ச்சி வெறும் பெருமை அல்ல அது தேசத்தின் முன்னேற்றம்.

அனைத்து துறைகளிலும் கால் பத்தித்துள்ள நம் பெண்கள் ஆட்டோமொபைல் துறையிலும் திறமையை நிரூபிக்க தவறவில்லை. எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிக்கும் ஓலா நிறுவனத்தின் ஆலை முழுவதுமாக பெண்களால் மட்டுமே இயக்கப்படும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. பெண்களுக்கான பல வேலை வாய்ப்புகளை ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தொழிற்சாலையில் ஏற்படுத்தியுள்ளதாக அந்நிறுவனத்தின் துணை நிறுவனர் பவிஷ் அகர்வால் தெரிவித்துள்ளார். 

வாகனத் தயாரிப்பு தொடர்பான அனைத்து பயிற்சிகளும் உரிய முறையில் பெண்களுக்கு கொடுக்கப்பட்டு தமது ஆலையில் முழு பொறுப்பும் பெண்களிடமே வழங்கப்பட இருப்பதாக அவர் கூறியுள்ளார். 10000க்கும் மேற்பட்ட பெண்கள் இதனால் வேலை வாய்ப்பு பெற்று பொருளாதார மேம்பாடு அடைவார்கள் என்பது உறுதி.

இந்த திட்டம் நடைபெற இருப்பது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பு ஆலையில். தற்போது 10 லட்சம் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் உற்பத்தி செய்வதாக திட்டம் உள்ளது, இது வரும் ஆண்டுகளில் இரு மடங்காக உயரும் எனவும் கூறுகின்றனர். மேலும் ஓலா நிறுவனம் இத்திட்டத்திற்காக சென்ற ஆண்டே 2400 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. ஏற்கனவே பல நிறுவனங்கள் பெண்களுக்கு தாராளமாக வேலைவாய்ப்பு வழங்கி வந்தாலும் சராசரியாக 20லிருந்து 30 சதவீதமாகவே அது இருந்துள்ளது. முழுக்க முழுக்க பெண்களால் இந்த தொழிற்சாலை இயக்கப்படும் என்ற ஓலாவின் அறிவிப்பு புதுமையே.

வாய்ப்புகள் மட்டுமே பெண்களுக்கு தேவை, பிரகாசத்தை அவர்களே உருவாக்கி கொள்வார்கள்.