வேளாண் பொருட்கள் பெரும்பாலும் விரைவில் அழுகும் தன்மையுடைய பொருட்களாதலால் அவற்றை  சந்தைப்படுத்துவதில் விரைந்து செயலாற்ற வேண்டியது அவசியம். மேலும் வேளாண் பொருட்களை ஏற்றுமதி செய்யும் உற்பத்தியாளர்களுக்கு பல்வேறு உதவிகள் தேவைப்படுகிறது. போக்குவரத்து மற்றும்  சந்தைப்படுத்துவதில் தேவைப்படும் அனைத்து உதவிகளையும் அரசு செய்யும் என்று 2019-ஆம் ஆண்டிலேயே உறுதியளித்துள்ளது.

இதன் அடிப்படியில் வேளாண் பொருட்களை வெளிநாடுகளில் விற்பனை செய்வதற்கான ஆலோசனைகள், வழிகாட்டுதல் ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று மத்திய அரசு வேளாண் பொருட்களோடு TMA திட்டத்தின் கீழ் பால் பண்ணைப் பொருட்களும் சேர்க்கப்படுவதாக அறிவித்தது.

வட அமெரிக்கா மற்றும் சில ஐரோப்பிய நாடுகளுக்கு வேளாண் பொருட்களை ஏற்றுமதி செய்தால், கடல் வழி சரக்கு போக்குவரத்து செலவில் 50%; விமானம் வாயிலான சரக்கு போக்குவரத்து செலவில் 100% மத்திய அரசு ஏற்கிறது. இந்த சரக்கு போக்குவரத்து கட்டணச் சலுகை இப்போது பால் பண்ணைப் பொருட்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

இத்திட்டம், மார்ச் 31, 2022 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனிடையே, ஏற்றுமதியாளர்களுக்கு திரும்ப அளிக்க வேண்டிய வரி நிலுவையில், 56 ஆயிரத்து 27 கோடி ரூபாய் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதை, ஏற்றுமதியாளர்கள் கூட்டமைப்பு வரவேற்றுள்ளது.

வெளிநாட்டு வர்த்தக பொது இயக்குனரகம் (DGFT) விரைவில் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறுவதற்கான வழிமுறைகளை அறிவிக்கும் என்று தெரிகிறது.