விவசாயப் பண்ணைகளில் வீணான கழிவுப்பொருட்களான சாணம், அதனுடன் கலந்த வைக்கோல், பசும்புல், இலைகள் மற்றும் சமையலறைக் கழிவுகள் ஆகியவற்றைக் காற்றில்லாச் சூழ்நிலையில் நொதிக்கச் செய்வதினால் உண்டாகும் வாயு “உயிர் வாயு” ஆகும். இது கரியமில வாயு, நைட்ரஜன், மீத்தேன் மற்றும் ஹைட்ரஜன் சல்பைடு போன்ற வாயுக்களின் கலவையாகும். இவற்றில் மீத்தேன் எரியும் தன்மையுடையது. இதன் சதவீதம் 55 ஆகும்.

ஈரமான சாணத்தைக் குவித்து வைப்பதினால் பலவிதமான நோய்க்கிருமிகள் உற்பத்தியாகிறது. மேலும் பயனற்றும் போகிறது. இதை சாண எரிவாயு உற்பத்தி செய்வதன் மூலம் அறவே தடுக்கலாம். சாண எரிவாயுவை சமையல் செய்யவும், என்ஜினை இயக்குவதற்கும், மின்சாரம் உற்பத்தி செய்யவும் பயன்படுத்தலாம். நன்கு செரித்த வாடையற்ற சாணக்கரைசலுக்குப் பெயர் சிலர்ரி. இது நிலத்தைப் பண்படுத்தவும், செழிப்பேற்றவும் பயன்படுகிறது.

சாண எரிவாயு கலன் அமைக்க அரசு நிதி உதவி

மத்திய அரசாங்கத்தின் எரிசக்தி ஆதாரத்துறை, இந்த எரிவாயு இயந்திரம் / சாண எரிவாயுக்கலன் அமைப்பதற்காக மானியத் தொகையை கதர் கமிஷன் மூலம் அளிக்கின்றது. இந்த மானியத்தொகை அமைக்கப்படும் எரிவாயு இயந்திரத்தின் அளவையும், அமைக்கப்படும் இடத்தையும் (அதாவது மலைப்பாங்கான நிலம் அல்லது சாதாரண நிலம்) மற்றும் அமைக்கப்படும் நபரையும் (சிறு விவசாயி, குறு விவசாயி, நிலமற்ற தொழிலாளி) பொருத்தது. இந்த மானியத்தொகை ஒவ்வொரு வருடமும் மத்திய அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்படும். மூன்று மாடுகளும், சாண எரிவாயுக்கலனை நிறுவக்கூடிய அளவு வீட்டில் இடமும் உள்ள எந்த விவசாயியும், அதைப்பெறுவதற்காக காதி கமிஷனையோ மாவட்டங்களில் உள்ள சர்வோதைய சங்க கதர் பவன்களையோ அணுகலாம்.

சாண எரிவாயுவை பயன்படுத்துவதால் கிடைக்கும் நற்பலன்கள்

  • சாண எரிவாயு சமையல் செய்யும் பெண்களுக்க முற்றிலும் பாதுகாப்பானது.
  • எரிவாயு கலன் வீட்டிலேயே இருப்பதால் புக்கிங் செய்து காத்திருக்க வேண்டிய அவசியமில்லை
  • சிலிண்டரில் எரிவாயுவின் இருப்பை கணக்கிடுவது கடினம், எரிவாயு இருப்பைத் தொட்டியில் கணக்கிடுவது சுலபம்.
  • சமையலுக்கு மட்டுமன்றி விளக்கு எரிப்பது, என்ஜின்களை இயக்குவது போன்ற பிற உபயோகங்களுக்குப் பயன்படுத்தலாம். வளமான உரமும் கிடைக்கிறது.
  • எரிவாயு கலன் கட்டி முடித்து இயக்கிய பிறகு செலவேதும் செய்ய வேண்டியதில்லை.

சாண எரிவாயு கலன் அமைத்து எடுத்துக்காட்டாக உள்ள பொன்னாரம்பட்டி விவசாயி

சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த பொன்னாரம்பட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி மகேஷ் குடும்பத்தினர், 32 ஆண்டுகளாக தம் வீட்டு தேவைக்கு முழுவதும் சாண எரிவாயுவை மட்டுமே உபயோகப்படுத்தி வருகின்றனர் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

தாங்கள் வளர்க்கும் கால்நடைகளின் சாணத்தைக் கொண்டே எரிவாயு உற்பத்தி செய்து சமைப்பதற்கு பயன்படுத்தி வருகிறார்கள் இவர்கள். 32 ஆண்டுக்கு முன்பு அரசு மானியம் மற்றும் கடனுதவி பெற்று இவர்கள் அமைத்த கலனுக்கு ஆன செலவு வெறும் ரூ.28 ஆயிரம் மட்டுமே. இன்றுவரை அதை பராமரித்து மட்டுமே வருகின்றனர். வேறு செலவு எதுவும் இல்லை. தொடர்ந்து உபயோகப்படுத்தி வருகின்றனர்.

ஆரம்பத்தில் கூட்டு குடும்பமாக இருந்த போது வாரத்திற்கு 2 முறை இரு மாட்டு சாணத்தை எடுத்து கரைத்து தொட்டியில் நிரப்பி வைத்தாலே, தட்டுப்பாடுமின்றி சமைப்பதற்கு தேவைப்பட்ட எரிவாயுவை செலவின்றி பெற முடிந்தது. அதுவே குறைந்த குடும்ப உறுப்பினர்களை கொண்டவர்களுக்கு வாரத்திற்கு ஒருமுறை சாணத்தை கரைத்து விட்டாலே ஒரு வாரத்திற்கு சமைப்பதற்கு தேவையான எரிவாயு கிடைத்துவிடுகிறது.

மாதா மாதம் நம் ஒவ்வொருவர் வீட்டிலும் எரிபொருள் சிலிண்டருக்கு நாம் ஒதுக்கும் தொகை ரூ.1000. அதன்படி மகேஷ் குடும்பத்தினருக்கு வருடத்திற்கு ரூ.10000 மேல் செலவு குறைகிறது. பண்ணை, விவசாய நிலம் வைத்திருக்கும் பலரும் இந்த செய்தி மூலம் அவர்கள் பண்ணை இடத்திலேயே சாண எரிவாயு கலன் அமைத்து பயனடைந்தால் எங்களுக்கும் மகிழ்ச்சியே.