இந்தியாவின் பொதுத்துறை விமான நிறுவனமான ஏர் இந்தியா கடும் நஷ்டத்தை எதிர்கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டதாலும், நஷ்ட மதிப்பு 70000 கோடி ரூபாயை எட்டிய காரணத்தினாலும் வேறு வழியின்றி அந்நிறுவனம் விற்கப்பட இருப்பதாக மத்திய அரசு முடிவெடுத்தது. அதன் பின் ஏலம் விடப்பட்ட ஏர் இந்தியா நிறுவனத்தை ஒரு வருடத்திற்கு பின் டாடா குழுமம் வாங்க முன் வந்தது. மத்திய அமைச்சர்கள் குழு ஆலோசனையில் இக்கருத்து விவாதிக்கப்பட்டு பின் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

ஏர் இந்தியாவுக்கு என சில பிரத்தியேக வரலாற்று பக்கங்கள் உள்ளன. 1932-ம் ஆண்டில் டாடா குழுமத்தால் துவங்கப்பட்டதே இந்த ஏர் இந்தியா. சுமார் 21 ஆண்டுகளுக்கு பிறகு 1953-ல் இந்நிறுவனம் அரசுடைமையாக்கப்பட்டது. அதன் பிறகு இந்தியாவின் ஒரே பொது துறை விமான சேவை வழங்கும் நிறுவனமாக இருந்து வந்துள்ளது. தனியார் நிறுவனங்களின் போட்டியாலும், தவிர்க்க முடியாத பல காரணங்களாலும் தொடர் நஷ்டங்களை சந்திக்கும் சூழல் ஏற்பட்டது ஏர் இந்தியா நிறுவனத்திற்கு. மத்திய அரசு இதை விற்கும் முடிவை அதிகாரப்பூர்வமாக அறிவித்த பின் சென்ற ஆண்டு டாடா குழுமம் 18000 கோடி ரூபாய்க்கு ஏர் இந்தியா நிறுவனத்தை மீண்டும் தமக்கு சொந்தமாக்கியது. அதாவது 68 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் டாடா கைவசமே வந்துள்ளது.

விற்கப்பட்ட பிறகும் ஏர் இந்தியா மீது அரசுக்கு இருக்கும் உரிமை

ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா குழுமம் வாங்கியிருந்தாலும் கூட, அந்த நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.14,718 கோடி மதிப்பிலான அசையா சொத்துக்கள் (கட்டடங்கள் உட்பட) அரசின் வசமே இருக்கும். அதேபோல் ஏர் இந்தியாவில் தற்போது பணியில் இருப்பவர் மற்றும் ஓய்வுபெற்றவர் ஆகியோரின் நலன்கள் காக்கப்படும் என்று அரசு கூறியுள்ளது.

எப்போது டாடா நிறுவனத்திடம் ஏர் இந்தியா ஒப்படைக்கப்படும்?

இந்நிறுவனத்தின் தற்போதைய கையிருப்பு மற்றும் நிதிநிலை அறிக்கை ஆகியவை குறித்து அனைத்து விவரங்களும் கணக்குகளும் டாடா நிறுவனத்திடம் ஏற்கனவே சமர்பிக்கப்பட்டு விட்டன. இதை டாடா சன்ஸ் பரிசீலனை செய்து தங்கள் ஒப்புதலை சொல்ல வேண்டும். அதன்பிறகு, வரும் வியாழக்கிழமைக்குள் அதாவது இந்திய குடியரசு தினத்திற்கு பிறகு ஏர் இந்தியா நிறுவனம் டாடா குழுமத்திடம் முழுவதுமாக ஒப்படைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.