இந்தியாவில் விவசாயத்தை ஊக்குவிக்க பல நற்திட்டங்களை செயல்படுத்தி கொண்டிருக்கும் நம் மத்திய வேளாண்துறை அமைச்சகம் விவசாயத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு ட்ரோன் தொழில்நுட்பம் மலிவான கட்டணத்தில் கிடைப்பதற்கான வழிகாட்டுதல்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

நடைமுறையில் இருந்து வரும் வேளாண் இயந்திரமயமாக்கல் துணை திட்டத்தில் சில திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் வேளாண் இயந்திரப் பயிற்சி மையங்கள், வேளாண் ஆராய்ச்சி மையங்கள், கிரிஷி விஞ்ஞான மையங்கள், வேளாண் பல்கலைக்கழகங்கள் வாங்கும் ட்ரோன்களுக்கு 100% மானியம் அல்லது ரூ.10 லட்சம் வழங்கப்படும். அதேபோல் வேளாண் உற்பத்தியாளர் சங்கங்கள், ட்ரோன்கள் வாங்க 75% மானியம் வழங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மேலும், ட்ரோன்களை சொந்தமாக வாங்காமல் வாடகைக்கு மட்டுமே எடுத்து விவசாய தேவைகளுக்கு பயன்படுத்தும் ஏஜன்சிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.6,000-மும், ட்ரோன்களை வாங்கிப் பயன்படுத்தினால் ஹெக்டேருக்கு ரூ.3,000-மும் நிதியுதவி வழங்கப்படும். இந்த நிதியுதவிகள் மற்றும் மானியம் 2023, மார்ச் 31-ம் தேதி வரை கிடைக்கும். இது தவிர விவசாயிகளுக்கு இன்னும் பல மானியம் மற்றும் நிதி உதவி வழங்கப்படுகிறது.

விவசாயிகள் ட்ரோன் பயன்பாட்டின் மூலம் சேவைகள் பெற வேண்டி இருப்பின் அவர்கள் விவசாய கூட்டுறவு சங்கங்கள், வேளாண் உற்பத்தியாளர் அமைப்புகள் மற்றும் ஊரக தொழில்முனைவோர்கள் அமைக்கும் ட்ரோன் வாடகை மையங்களை அணுகலாம். அவர்களுக்கு விவசாயம் சம்பந்தப்பட்ட சேவைகள் வழங்க ட்ரோன் மற்றும் இணைப்பு பாகங்கள் வாங்கும் செலவில் 40% அல்லது ரூ.4 லட்சம் என நிதியுதவி அளிக்கப்படும். ட்ரோன் வாடகை மையங்கள் அமைக்க முன்வரும் வேளாண் பட்டதாரிகளுக்கு ட்ரோன் வாங்கும் செலவில் 50% அல்லது ரூ.5 லட்சம் மானிய உதவி கிடைக்கும்

ட்ரோன் செயல்பாடுகள் மற்றும் இயக்குதல் குறித்த கட்டுப்பாடுகள்

விமான போக்குவரத்து துறை அமைச்சகம், மற்றும் விமான போக்குவரத்து தலைமை இயக்குனர் அனுமதிக்கும் வழித்தடங்களில் ட்ரோன்களின் செயல்பாடுகள் அனுமதிக்கப்படும். இந்தியாவில் ட்ரோன் பயன்பாட்டை ஒழுங்குமுறைப்படுத்த ‘ட்ரோன் விதிமுறைகள் 2021’-ஐ விமான போக்குவரத்து துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதேபோல் விவசாய நிலங்கள், வனப்பகுதிகள் ஆகியவற்றில் பூச்சி மருந்து மற்றும் ஊட்டச்சத்து தெளிப்புக்கு ட்ரோன்களை பயன்படுத்துவதற்குரிய நிலையான செயல்பாட்டு விதிமுறைகளை வேளாண்துறை கொண்டு வந்துள்ளது. மேல்குறிப்பிட்டுள்ள இந்த விதிமுறைகள் அனைத்தையும் விவசாய ட்ரோன்களை பயன்படுத்தும் நிறுவனங்கள் ஒவ்வொருவரும் கடைபிடிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.