ஆகாசா ஏர் நிறுவனம் பிரபல ராகேஷ் ஜுன்ஜுன்வாலா-வின் ஆதரவுடன் தனது விமான சேவையை இந்த ஆண்டு மே மாத இறுதி அல்லது ஜூன் துவக்கத்தில் தொடங்க தயாராகி வருகிறது என்று மூத்த விமான அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இது கடந்த ஏப்ரல் மாதத்தில் முதல் போயிங் 737 மேக்ஸ் விமானத்தை வாங்கியது குறிப்பிடத்தக்கது.

“ஏப்ரல் இரண்டாம் பாதியில் முதல் விமானமும், மே மாத இறுதி அல்லது ஜூன் துவக்கத்தில் முதல் வணிக விமானமும் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளோம் என்றும், அதற்குரிய அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்வதற்கு அரசாங்கம், DGCA உடன் இணைந்து பணியாற்றி வருவதாகவும்” ஆகாசா ஏர் நிறுவனத்தின் CEO வினய் துபே தெரிவித்துள்ளார். மார்ச் 2023 இறுதியில் இந்நிறுவனம் 18 விமானங்களை தன்வசம் வைத்திருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

9 பில்லியன் டாலர் ஒப்பந்தத்தில் கையெழுத்து

விமானப்போக்குவரத்து பல்வேறு சவால்களை எதிர்கொண்டிருக்கும் இந்நிலையில் சென்ற ஆண்டில் இத்துறையில் தம் நுழைவை அதிகாரபூர்வமாக அறிவித்தது ஆகாசா. அதுமட்டுமல்லாது, விமானத் துறையில் சிறந்த பெயரினை கொண்ட விமான நிறுவனமாக 72 போயிங் 737 மேக்ஸ் விமானங்களுக்காக போயிங்குடன் $9 பில்லியன் ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டது. 2022 ஆம் ஆண்டின் தொடக்க காலத்தில் ஆகாசா நிறுவனம் தனது முதல் விமானத்தை தொடங்கும் என்றும் கூறப்பட்டது.

வழித்தடங்கள் மற்றும் பெருநகரங்களுக்கிடையே சேவை

மெட்ரோ நகரங்களிலிருந்து இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களுக்கு ஆகாசா சேவைகள் கிடைக்கும் என்று துபே கூறியுள்ளார். அத்துடன் மெட்ரோ நகரங்களுக்கு இடையே பயணிக்கும் விமானங்களும் இருக்கும். தொடர்ந்து இந்நிறுவனத்திடம் 20 விமானங்கள் இருக்கும்பட்சத்தில், 2023ம் ஆண்டின் இரண்டாம் பாதியில் சர்வதேச விமானங்களை பற்றிய இலக்குடனும் இந்நிறுவனம் செயல்படும் என்றும் அவர் கூறியுள்ளார். இப்போது ஆகாசா நிறுவனம் பணியாளர்களை பணியில் அமர்த்த ஆயத்தமாகியுள்ளது. அதோடு தனது வழித்தடங்களை திட்டமிடவும் ஆரம்பித்துவிட்டது.