நடப்பு நிதியாண்டு 2022-23க்கான பட்ஜெட் தாக்கல் செய்ததில் பல்வேறு பொருட்களின் மீதான சுங்க வரி குறைக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து அந்த பொருட்களின் விலை குறையும் வாய்ப்பு உள்ளது. ஒரு சில பொருட்களின் வரி உயர்த்தபட்டும் உள்ளது.

இதற்காக பல கட்ட ஆலோசனைகள் நடத்தப்பட்டது. அதற்கு பிறகு 350 பொருட்கள் மீதான சுங்க வரி விலக்கப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சில வேளாண் பொருட்கள், ரசாயனங்கள், துணிகள், மருத்துவ உபகரணங்கள், மருந்து மற்றும் மருந்து மூலக் கூறுகள் ஆகியவை இதில் அடங்கும். அது மட்டும் அல்லாது சில பொருட்களின் மீதான வரி விகிதம் குறைக்கப்பட்டும் உள்ளது. அரசின் இந்த நடவடிக்கையால் உற்பத்தி மற்றும் வர்த்தகம் அதிகரிப்பு, பல்வேறு திட்டங்களின் மேம்பாடு ஆகியவை எளிமையாக்கும் வாய்ப்பு இருக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

பட்ஜெட்டுக்கு பிறகு விலை குறையும் பொருட்களாக உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மின்னணு சாதனங்கள், ஸ்மார்ட் கடிகாரம், ஹியரிங் எய்டு, இயர்போன், எலக்ட்ரானிக் ஸ்மார்ட் மீட்டர் ஆகியவையும், மொபைல் சார்ஜர், கேமிரா லென்ஸ், மெத்தனால், அசிட்டிக் அமிலம் மற்றும் பெட்ரோலியம் சுத்திகரிப்புக்குத் தேவையான மூலப் பொருட்கள் மீதான சுங்க வரி ஆகியவை குறையவும் செய்யும்.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் இதை பற்றி கூறுகையில் இப்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்த பட்ஜெட் 2022-23 அடுத்து வரும் 25 ஆண்டு கால வளர்ச்சியை கருத்தில் கொண்டு மிகவும் கவனத்துடன் தயாரிக்கப்பட்டுள்ளது. நாடு மிகச்சிறந்த பொருளாதார வளர்ச்சியை அடைய வேண்டும் என்ற நோக்கில் ஒரு சீரிய தொலைநோக்கு பார்வையுடன் இந்த பட்ஜெட் போடப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

வைரம், ரத்தினங்கள் ஆகியவற்றின் மீதான இறக்குமதி வரி 5%-ஆக குறைக்கப்பட்டும், குடை மீதுள்ள வரி 20% அதிகரிக்கப்பட்டும், ஸ்டீல் ஸ்கிராப் மீதான சுங்க வரி விலக்கு காலம் நீட்டிக்கப்பட்டும் உள்ளது. அதே போல் நகைகளின் ஏற்றுமதியை அதிகரிக்கும் விதத்தில் ஈ-காமர்ஸ் முறையில் செய்யப்படும் ஏற்றுமதிக்கு அனுமதி அளிக்கப்படும். இம்முறை தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் நடப்பு ஆண்டு ஜூன் மாதத்தில் உருவாக்கப்படும் என்று அமைச்சர் தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.