நடப்பு நிதியாண்டு 2021-22 மானியக்கோரிக்கையின் போது தமிழ்நாடு அரசு சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் சிறுபான்மையினருக்கு 1000 இலவச மின் மோட்டார் உடன் கூடிய தையல் இயந்திரங்கள் வழங்கப்படும் என அறிவித்திருந்தார். அதனை செயலாக்க இப்போது நிர்வாக ஒப்புதல் மற்றும் நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

வசதியற்ற ஏழ்மை நிலையில் உள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பை சேர்ந்தவர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்தும் நோக்கத்துடன் இந்த திட்டம் செயல்படுத்தப்படும். இதன் மூலம் மின் மோட்டார் பொருத்திய தையல் இயந்திரங்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன.

சிறுபான்மையின மக்களுக்கும் மின்மோட்டருடன் தையல் இயந்திரங்கள்

இதே உதவிகளை சிறுபான்மையின மக்களுக்கும் செய்தால் அவர்களின் பொருளாதார மற்றும் கல்வி நிலைகளில் திட்டமிடப்பட்ட உறுதியான முன்னேற்றத்தை பெறவும், வாழ்க்கை தரம் உயரவும் எதுவாக இருக்கும். ஆகவே அவர்களுக்கும் இலவச மின்மோட்டார் கூடிய தையல் இயந்திரங்களை வழங்கலாம் என சிறுபான்மையினர் நலத்துறை இயக்குனர் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளார்.

இப்பரிந்துரையை ஏற்றுக்கொண்டு அதனை செயல்படுத்தும் விதமாக 1000 சிறுபான்மை இன பயனாளிகளுக்கு மின்மோட்டார் உடன் கூடிய இலவச தையல் இயந்திரம் வழங்க தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது. சில தகுதிகள் அடிப்படையில் இத்திட்டத்தின்‌ கீழ்‌ சிறுபான்மையினர்களுக்கு தையல் இயந்திரங்கள்‌ வழங்கப்படும்‌.

யார் யாரெல்லாம் எந்த அடிப்படையில் தையல் இயந்திரங்கள் பெறலாம்

தையல்‌ கலை பயின்றவராக இருத்தல் வேண்டும்
தையல்‌ கலை பயின்றதற்கான உரிய சான்றிதழ்‌ சமர்ப்பிக்க வேண்டும்‌.
ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.100,000/ ஆக இருத்தல்‌ வேண்டும்‌.
20 லிருந்து 45 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும்
கைம்பெண்‌ மற்றும்‌ கணவனால்‌ கைவிடப்பட்‌டவர்‌களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்

ஒரு முறை தையல்‌ இயந்திரம்‌ பெற்றிருந்தால் 7 ஆண்டுகள்‌ கடந்த பின்னரே மீண்டும்‌ தையல்‌
இயந்திரம்‌ பெறத் தகுதி உடையவராவர். இத்திட்டத்தின்‌ கீழ்‌ பயன்பெற விரும்பும்‌ பயனாளிகள்‌ சம்பந்தப்பட்‌ட மாவட்ட பிற்படுத்தப்பட்டோர்‌ மற்றும்‌ சிறுபான்மையினர்‌ நல அலுவலர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம். தகுதி அடிப்படையில் முன்னுரிமை பெற்று தையல் இயந்திரங்களை பெறலாம்.