வருமான வரித் தாக்கல் செய்ய கால அவகாசம் மேலும் நவம்பர் 30-ம் தேதி வரை நீட்டிப்பு செய்வதாக வருமான வரித் துறை அதிரடியாக அறிவித்துள்ளது.

இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் முதல் கோவிட்-19 தொற்று பாதிப்பு மிகவும் தீவிரமாக இருக்கிறது. இதை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த மார்ச் மாதம் 25-ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

இதன் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு பல கட்டமாக ஊரடங்கு காலமும் தொடர்ந்து நீட்டிப்பு செய்யப்பட்டு வந்தது. இந்த ஊரடங்கு காலத்தில் வரி செலுத்தும் செயல்களில் சிக்கல் ஏற்பட்டதன் காரணமாக பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு பல சேவைகளுக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.

வருமான வரி தாக்கல்:

மேலும், வருமான வரித் துறையின் கடைசி கட்ட அறிவிப்பின்படி, (30/09/2020) தான் வரித் தாக்கல் செய்ய கடைசி தேதி ஆகும். கோவிட்-19 ஊரடங்கு உட்பட பல காரணத்தினால் மேலும் வரித் தாக்கல் செய்ய பலருக்கு சிரமம் உள்ளதைக் கருத்தில் கொண்டு, (30/11/2020) வரை கால அவகாசமானது நீட்டிக்கப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக வருமான வரித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவிட்-19 வைரஸ் ஊரடங்கின் காரணமாக வருமான வரி தாக்கல் செய்வதற்கு கூடுதலாக கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஏற்கெனவே, (2019-2020) நிதி ஆண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி நவம்பர் 30-ம் தேதி ஆகும். இந்த நிலையில் (2018-2019) நிதி ஆண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கும் அதே கால அவகாசத்தை வருமான வரி துறை வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த கோவிட்-19 தொற்றின் தீவிரம் தொடரும் சமயத்தில் நவம்பர் மாதத்தையும் தாண்டி கால அவகாசமானது நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. வரித் தாக்கலில் தாமதம் ஏற்படும் பட்சத்தில் அபராதம் செலுத்த வேண்டுமென்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக வெளியிட்டிருந்த அறிக்கையில், டிசம்பர் மாதம் 31-ம் தேதி வரை தாமதமாக வரி செலுத்தும் பட்சத்தில் கூடுதலாக 5,000 ரூபாய் அபராதத் தொகை ஆக நிர்ணயிக்கப்படும். மேலும் டிசம்பர் மாதத்தையும் தாண்டி மார்ச் 31-ம் தேதி வரை வரி செலுத்தும் போது 10,000 ருபாய் வரை அபராதமாக விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Author – Gurusanjeev Sivakumar