மத்திய அரசு மார்ச் 2022 வரை துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு மற்றும் மூங் எனப்படும் பாசிப்பருப்பு போன்ற பருப்பு வகைகளுக்கான இறக்குமதி அளவு கட்டுப்பாடுகள் கொள்கையின் எளிமையை நீட்டித்துள்ளது. முன்னதாக, துவர் மற்றும் உளுந்து மட்டுமே ‘இலவச’ பிரிவின் கீழ் இருந்தன, இதுவும் இந்த ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் முடிவடையும் என்று தொழில்துறையினர் தெரிவித்தனர்.

இதன்படி மார்ச் 31 அன்று அல்லது அதற்கு முன்பு மேற்படி பொருட்கள் உற்பத்தி செய்யும் நாடுகளிடமிருந்து ‘ஏற்றுமதி ஒப்பந்த சீட்டு (bill of lading)’ அல்லது ‘லாரி ரசீதுகள்’ ஆகியவை பெறப்பட்டிருக்க வேண்டும். மேலும் சரக்குகள் ஜூன் 30, 2022க்குள் இந்திய துறைமுகங்களை வந்தடைதல் வேண்டும் என்று வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் தன் அறிவிப்பில் கூறியுள்ளது. மத்திய அரசு இந்நடவடிக்கை எடுத்திருப்பதால் உணவுப் பணவீக்கத்தை தடுக்க முடியும் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்தியாவிற்கு பருப்பு எங்கிருந்தெல்லாம் வருகிறது

நம் நாட்டிற்கு அதிக அளவில் பருப்புகளை சப்ளை செய்யும் இரு நாடுகள் மியான்மர் மற்றும் தான்சானியா. இந்திய அரசு எடுத்திருக்கும் இந்த நடவடிக்கை மூலம் சற்றே மறைந்து கொண்டு வரும் தான்சானியா ஏற்றுமதியாளர்கள் நம்பிக்கை மீண்டும் பிரகாசமடைய வாய்ப்புள்ளது என்றும் தெரிகிறது.

இந்தியா பருப்பு வகைகளை அதிகமாக உற்பத்தி செய்யும் நாடாக இருந்தபோதிலும், அதன் உள்நாட்டு நுகர்வு உற்பத்தியை விட அதிகமாக உள்ளது. அதனால் பிற நாடுகளிடமிருந்து நாம் பருப்பு வகைகளை இறக்குமதி செய்யும் நிலை ஏற்படுகிறது.

துவரை அறுவடை ஏற்கனவே பல இடங்களில் நடந்து முடிந்துவிட்டது, இன்னும் பல இடங்களில் இன்னமும் நடைபெற்று வருகிறது. தென்மாநிலங்கள் தாமதமாக மழையை பெற்றதால் சில பாதிப்புகள் ஆங்காங்கே ஏற்பட்டிருக்கலாம். அடுத்த 3 மாதங்களில் துவரையின் கையிருப்பு சர்வதேச சந்தையில் அளவிற்குட்பட்டே இருக்கும்.