பிஏபி, அமராவதி பகுதிகள் மற்றும் இறவை பாசனத்தில் முப்பதாயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள மக்காச்சோளம் இப்போது அறுவடைக்கு தயாராகியுள்ளது. உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் பகுதிகள் மக்காச்சோளத்திற்கு பெயர் போனவை.

இப்பகுதியில் விவசாயிகள் தாம் விளைவித்த மக்காச்சோளம் கடந்த சில வருடங்களால் பல காரணங்களால் சரியான விலை பெறாமல் இருந்து வந்தது. பூச்சி தாக்குதல், சரியாக அறுவடை காலங்களில் விலை நிலையின்றி போதல், வெளிமாநில தேவை வரத்து அதிகரித்தல் ஆகிய காரணங்களால் உள்ளூரில் விளைவிக்கப்படும் மக்காச்சோளம் நல்ல விலை பெறவில்லை. ஆனால் தற்போதைய சூழ்நிலை சற்றே மாறியுள்ளது. அது விவசாயிகளுக்கு சாதகமாக அமையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சென்ற வாரத்தில் கொள்முதல் விலை ஒரு குவிண்டால் ரூபாய் 1900 என்ற நிலையில் இருந்தது. இப்போது மக்காச்சோளத்தை தேவை அதிகரித்து வருகிறது, அதே சமயம் வெளி மாநிலங்களிலிருந்து வரத்தும் குறைந்து
உள்ளது. அதனால் இப்போது மக்காச்சோள விலையில் ஏற்றம் ஏற்பட்டுள்ளது. தரத்திற்கு தகுந்தாற்போல் ரூபாய் 2100 வரை விலை கிடைக்கிறது என்று கூறுகிறார்கள்.

இதுபற்றி அதிகாரிகளிடம் கேட்டபோது “உடுமலை சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மக்காச்சோள சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதுவரையிலும் 20% அறுவடை மட்டுமே முடிந்துள்ளது, அடுத்த மாதம் அதாவது மார்ச் கடைசி வரை அறுவடை காலம் தொடரும். முன்பு ஏக்கருக்கு 40 குவிண்டால் மகசூல் எடுத்த விவசாயிகள் இப்போது 20லிருந்து 25 குவிண்டால் மட்டுமே மகசூல் எடுக்கின்றனர். பருவகால மாற்றம், நோய் தாக்கம் ஆகிய பல காரணங்களால் இந்த மகசூல் குறைவு ஏற்பட்டுள்ளது என்று விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

மாடு மற்றும் கோழிகளின் தீவனத்திற்காக மக்காச்சோளம் அதிகம் தேவைப்படுகிறது. இப்போது மகசூல் குறைந்துள்ளதால், வெளி மாநில வரத்தும் இருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். இதனால் விவசாயிகள் அறுவடை செய்த மக்காச்சோளத்தை விற்பனை செய்யாமல் இருப்பு வைக்க ஆரம்பித்துள்ளனர். சந்தையில் மக்காச்சோளத்தை டிமாண்ட் அதிகரித்தல் விலை உயரும் வாய்ப்பு உள்ளது. இப்போது வெயில் காலம் துவங்கிவிட்டதால் மக்காச்சோளத்தை நன்கு காய வைத்தே இருப்பு வைக்க அவர்களால் முடிகிறது.

இந்த நிலை தொடர்ந்து நீடித்தால் ஏக்கருக்கு குறைந்த மகசூல் பெற்றாலும் கூட விவசாயிகள் தங்கள் பயிருக்கு நல்ல விலை பெறுவார்கள் என்று எதிர்பார்க்கிறார்கள்.” என்று கூறுகிறார்கள்.