மத்திய அரசு பொதுத்துறை வங்கிகளுக்காக ரூ.20 ஆயிரம் கோடி நிதி உதவி வழங்க திட்டமிட்டுள்ளது. அதற்காக மத்திய அரசு நாடாளுமன்றத்திடம் ஒப்புதல் கோரியுள்ளது.

தற்போது, பெரும்பாலானோரின் தொழில், வருமானம், வேலை ஆகியவை கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ளன. வங்கிகளில் கடன் பெற்றவர்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் திரும்ப செலுத்த முடியாத சூழலில் உள்ளார்கள். இதன் காரணமாக வங்கிகள் வழங்கியுள்ள கடன்கள் அனைத்தும் வாராக் கடன்களாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

வங்கிகளின் வாராக்கடன் மார்ச் 2020-ன் நிலவரப்படி 8.5 சதவீதமாக இருந்தது. இந்திய வங்கித் துறையின் மொத்த வாராக்கடன் விகிதம் மார்ச் 2021-ல் மாதத்தில் 12.5 சதவீதமாக உயரும் என ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

மத்திய அரசு முடிவு:

இதன் காரணமாக பொதுத்துறை வங்கிகளுக்கு இருபது ஆயிரம் கோடி ரூபாய் நிதி உதவி செய்ய மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இதன் மூலமாக வாராக்கடன் உயர்வு சுமைகளை சமாளிப்பதற்காகவும், தொடர்ந்து வங்கிகளின் அன்றாட அலுவல்களுக்கான செலவுகளுக்கும் பயன்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் வங்கித் துறைகளுக்கு என எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை. அதற்கு பதிலாக, நிதி சந்தையிடம் இருந்து வங்கிகள் நிதி ஆதரவைப் பெற்றுக் கொள்ளுமாறு கூறியிருந்தது. பொதுத் துறை வங்கிகளுக்கு ரூ.3.5 லட்சம் கோடி நிதி உதவியை கடந்த 5 ஆண்டுகளில் மத்திய அரசு வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கொரோனா காலத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை சமாளிக்க வேண்டும் என்பதற்காக பொதுத் துறை வங்கிகளுக்குத் தேவையான நிதி உதவிகள் அனைத்தும் செய்யப்படும் என்று கடந்த ஏப்ரல் மாதத்தில் மத்திய அரசு உறுதி அளித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அதற்கேற்ப, மத்திய அரசு தற்போது பொதுத் துறை வங்கிகள் தங்களின் வாராக்கடன் சுமையைச் சமாளிக்கும் வகையில் நிதியுதவி அளிக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக நாடாளுமன்றத்திடம் மத்திய அரசு ஒப்புதலை கோரியுள்ளது.

மேலும், மத்திய அரசு நாடாளுமன்றத்திடம் அரசின் செலவினங்களுக்காக ரூ.1.67 லட்சம் கோடி கூடுதலாக ஒதுக்கீடு செய்ய வேண்டும் என ஒப்புதல் கோரியுள்ளது. வரி வருவாய் ஈட்ட முடியாமல் நெருக்கடியில் இருக்கும் மாநிலங்களுக்கு ரூ.46,602 கோடி வழங்க உள்ளதாகவும்,  உணவுப் பொருட்களுக்கான மானிய செலவுகளுக்காக ரூ.10 ஆயிரம் கோடியை ஒதுக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய வங்கித் துறையின் மொத்த வாராக்கடன் விகிதம் 2021 மார்ச் மாதத்தில் 12.5 சதவீதமாக உயரும் என ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Author – Gurusanjeev Sivakumar