வளர்ச்சியடைந்து வரும் துறைகள் மற்றும் வெளிப்படையான, நம்பகமான, பாதுகாப்பான 5ஜி தொலைதொடர்பு உள்ளிட்ட வளர்ந்து வரும் அடுத்ததலைமுறை தொழில்நுட்பம் ஆகியவற்றை உருவாக்குவதில் இந்தியா, இஸ்ரேல், அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து பணியாற்றத் தொடங்கியுள்ளன.

இந்தியா, அமெரிக்கா, இஸ்ரேல்:

தொழில்நுட்பங்கள், நீா் மேலாண்மை உள்ளிட்ட விவகாரங்களில் ஒருங்கிணைந்து செயல்படுவது தொடா்பாக அமெரிக்கா-இந்தியா-இஸ்ரேல் கூட்டணி  அமைப்பைச் சோ்ந்த அதிகாரிகள் கடந்த வாரம் ஆலோசனை நடத்தினா்.

பிரதமர் நரேந்திர மோடி மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஜூலை 2017ல் இஸ்ரேலுக்கு மேற்கொண்ட வரலாற்று சிறப்புமிக்க சுற்றுப்பயணத்தின்போது இந்த திட்டத்தை தொடங்குவதற்கான பணி முன்னெடுக்கப்பட்டது. 5ஜி தொழில்நுட்பமானது அடுத்த தலைமுறை தொழில்நுட்பங்களுடன் கூடிய அறிவியல், ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்கு ஒத்துழைக்கும்.

ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தொலைபேசியைப் பயன்படுத்துபவர்கள் வரவிருக்கும் இந்த தொழில்நுட்பம் என்னவாக இருக்கும் என்பதை கற்பனை கூட செய்ய முடியாத அளவிற்கு இருக்கும். ஆகையால் ஒன்று சேர்ந்து அதிகாரப்பூர்வமாக இந்த தொழில்நுட்பத்தின் வளர்ச்சி மற்றும் முக்கியத்துவத்தை உறுதிப்படுத்துவதன் மூலமாக, இந்த மூன்று நாடுகளும் 5ஜி தொழில்நுட்பத்தை  முன்னேற்றுவோம் என சா்வதேச வளா்ச்சிக்கான அமெரிக்க முகமையின் துணை நிர்வாகி போனி கிலிக் கூறியுள்ளார்.

இது தொடா்பாக சா்வதேச வளா்ச்சிக்கான அமெரிக்க முகமையின் துணை நிர்வாகி போனி கிலிக் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது, அறிவியல் தொழில்நுட்ப ஆராய்ச்சியில் இந்தியா, இஸ்ரேலுடன் இணைந்து அமெரிக்கா செயல்பட உள்ளது. முக்கியமாக 5ஜி தொழில்நுட்பத்தை உருவாக்குவதில் மூன்று நாடுகளும் ஒருங்கிணைநது செயல்படும்.

அமெரிக்காவில் உள்ள சிலிகான் பள்ளத்தாக்கு, இந்தியாவின் பெங்களூரு, இஸ்ரேலின் டெல் அவிவ் ஆகியவை தொழில்நுட்ப நிறுவனங்களுக்கான முக்கிய மையங்களாக விளங்கி வருகின்றன. அங்கு புதுமையான தொழில்நுட்பங்களும், நடவடிக்கைகளும் தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

5ஜி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி எந்தவொரு நாடும் மற்ற நாடுகளை அடக்க முயல்வதை இந்தக் கூட்டணி அனுமதிக்காது. இந்தியா-அமெரிக்கா-இஸ்ரேல் நாடுகள் ஒன்றிணைந்து மேற்கொள்ளும் தொழில்நுட்ப வளா்ச்சி தொடா்பான ஆராய்ச்சியானது வெளிப்படைத்தன்மையுடன் நடைபெறும்.

Author – Gurusanjeev Sivakumar