தமிழகத்தில் பெண்கல்வி ஊக்குவிப்பு, தாலிக்கு தங்கம், திருமண உதவி தொகை திட்டம் என பல்வேறு நலத்திட்டங்கள் ஏழை பெண்களின் வாழ்வுக்கு விளக்கேற்றுவதற்காக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அரசு அறிவிக்கும் எந்த ஒரு நலத்திட்டங்களும், நிதி உதவியும் தகுதியுடைய மக்களுக்கு போய்ச்சேரவேண்டும் என்பதில் தமிழக அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இந்த நிலையில், தாலிக்கு தங்கம் திட்டத்தின் கீழ் திருமண நிதி உதவி பெறுவதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு தற்போது அறிவித்துள்ளது.

மேற்கூறப்பட்ட இந்த நலத்திட்டங்கள் யாவும் மிகவும் நலிந்த நிலையில் உள்ள மக்களை சென்றடையும் வகையில் சற்று திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உண்மையில் வசதியின்மையில் தவிக்கும் ஏழைகள் எந்த பாதிப்பும் இன்றி பயன்பெறுவர்.

இந்த புதிய வழிகாட்டு நெறிமுறைகள் கூறுவது என்ன? திருமண நிதி உதவி, தாலிக்கு தங்கம் ஆகியவற்றிற்கு விண்ணப்பம் செய்வோரின் குடும்பத்தில் அரசு வேலையில் இருக்கும் நபர் எவரும் இருக்க கூடாது.வேறு திருமண நிதியுதவி திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற்றிருக்கக் கூடாது. நான்கு சக்கர வாகனம், மாடி வீடு ஆகியவை வைத்திருக்கக் கூடாது.

ஆண்டு வருமானம் ரூ.72,000-க்குள் இருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.மேலும் ஏற்கனவே திருமண மண்டபங்களில் நடைபெற்ற திருமணங்களுக்கு நிதியுதவி கோரி விண்ணப்பித்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்படும் எனவும், மணமகள் 18 வயதும், மணமகன் 21 வயதும் நிரம்பியிருப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது