மத்திய அரசின் 2021-ஆம் ஆண்டின் புதிய தகவல் தொழிலநுட்ப விதிகளில் டிஜிட்டல் தளங்கள், ஆப்கள், சமூக ஊடகங்கள் போன்றவற்றின் செயல்பாடுகளுக்கு பல்வேறு வரைமுறைகளும், விதிமுறைகளும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதில் விதிக்கப்பட்டுள்ள ஒரு விதியில் “50 லட்சத்துக்கும் அதிகமான பயனர்களை கொண்ட மிகப்பெரிய டிஜிட்டல் தளங்கள் தம்மிடம் வந்த புகார்கள் அதன் மேல் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை பிரதிமாதம் அறிக்கையாக தாக்கல் செய்யவேண்டும்.

அதேபோல் எத்தனை இணைப்புகள் அல்லது தகவல்கள் நீக்கப்பட்டுள்ளன என்ற தகவல்களும் தெரிவிக்கப்பட வேண்டும்” இந்நிலையில் தனது இரண்டாவது மாதாந்திர அறிக்கையை வெளியிட்ட whatsapp நிறுவனம் ஜூன் 16 முதல் ஜூலை 31 வரை, 594 புகார்கள் வந்ததாகவும் அதில் 74 கணக்குகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு இருந்ததாகவும், 30,27,000 கணக்குகள் தடைசெய்யப்பட்டதாகவும் அறிக்கை வெளியிட்டது.

இந்தியாவில் முடக்கப்பட்ட 95% whatsapp கணக்குகளுக்கு காரணம், மொத்த மற்றும் தானியங்கும் வகையில் செட்டிங் செய்யப்பட்ட செய்திகள் அங்கீகரிக்கப்படாத வகையில் செயல்பட்டதே ஆகும். உலகளவில் மாதத்திற்கு சராசரியாக இந்த தளத்தில் தடைசெய்யப்பட்ட கணக்குகளின் எண்ணிக்கை 8 மில்லியன்.

இந்நிறுவன செய்தி தொடர்பாளர் “நாங்கள் தடுப்பு நடவடிக்கைகளிலேயே முக்கியமாக கவனம் செலுத்துகிறோம். தவறான செயல்கள் நடைபெற்ற பின்னர் அவற்றை கண்டுபிடித்து நடவடிக்கை எடுப்பதை காட்டிலும் அவ்வாறு நடக்கவிருக்கும் முதல் தருணத்திலேயே தடுப்பது என்பது மிகவும் சிறந்தது” என்று கூறினார். மேலும் 3 நிலைகளில் whatsapp கணக்கின் தன்மை கண்டறியப்படுகிறது – முதல் பதிவின்போது, செய்திகள் அனுப்பும்போது, எதிர்மறை கருத்துக்கள் / விளைவுகள் ஒரு பயனர் ரிப்போர்ட்டாகவோ அல்லது தடைசெய்யப்பட்டாலோ என்ற அடிப்படையில் ஒவ்வொரு கணக்கும் 3 நிலைகளில் ஆராயப்படுகிறது. என்றார்.