மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் என்பது மூடத்தனம் இன்று மரம் வளர்ப்போம் உயிர் காப்போம் என்கிறது என் இனம் இன்று -மோ.தேவேந்திரன்

சூரியக்கோள்கள் எதிலும் இல்லாத தனி சிறப்பு நாம் வாழும் பூமிக்கோளில் இருக்கும் நீரும், மழையும், தாவரங்கள் வளரும் சூழலும் கொண்டிருப்பது தான். மனிதன் உயிர்கொண்டிருக்க காரணமும் இவையே. மரங்கள் இல்லையேல் மழை ஏது, மழை இல்லையேல் நீர் ஏது, பிறகெப்படி இங்கே உயிர்கள் வாழும்.

காற்றை சுத்திகரிக்கும் மரங்கள் வாழும்போதும் சரி, பட்டு வீழ்ந்தபின்பும் சரி ஒவ்வோர் சருகும் உபயோகமானதாகவே இருக்கிறது. அவற்றின் அழிவை தடுப்பதோடு அல்லாமல் மரக்கன்றுகள் நடுவதிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர் இன்றைய இளம் சமுதாயத்தினர்.

அவர்களை ஊக்குவிக்கவும் மண் செழிக்கவும் பொன்விழா கண்டிருக்கும் நம் கோயம்பத்தூர் வேளாண் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் மேட்டுப்பாளையம் வனக்கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் மர வளர்ப்பு குறித்த சான்றிதழ் பயிற்சி நடத்த உள்ளது.பிரதி சனிக்கிழமை தோறும் தொடர்ந்து 6 மாதங்களுக்கு இதற்கான வகுப்புகள் நேரடியாக நடத்தப்படும்.

இதில் சேருவதற்கு வயது வரம்பு – 18 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். கல்வி தகுதி : 10ம் வகுப்பு (தேர்ச்சி பெற்றவர் மற்றும் தோல்வியடைந்தவர்கள்) இந்த பயிற்சியில் மர நாற்றாங்கால் உற்பத்தி தொழில்நுட்பம், தொழிற்சாலை சார்ந்த மர சாகுபடி, வேளாண் காடுகள் சார்ந்த தொழில் முனைவோரை உருவாக்குதல், வேளாண் காடுகளுக்கான உரிமம், சட்டங்கள் மற்றும் கொள்கைகள் குறித்து கற்றுத்தரப்படும்.

இப்பயிற்சி முடித்தவர்கள் சுய தொழில் வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ளவும் முடியும்.மிகக்குறைந்த கட்டணத்தில் இப்பயிற்சி வழங்கப்படும். வேளாண் காடுகள் துறை, வனக்கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், மேட்டுப்பாளையத்தை தொடர்பு கொண்டு மேலும் விவரங்கள் அறியலாம். சேர்க்கை துவங்கப்பட்டுவிட்டது. இம்மாதம் 11-ம் தேதியிலிருந்து பயிற்சி ஆரம்பமாகும்