தொடர் மழை…பல மாவட்டங்களில் வெள்ளம்….இது போதாதென தங்கம், வெள்ளி போல் நாளொன்றுக்கு கிடுகிடு விலை உயர்வில் தக்காளி. தக்காளி இல்லாமல் ஒரு நாளின் சமையல் எப்படியும் நடக்காது, ஒரு கிலோ தக்காளி 150 ரூபாய்க்கு விற்கும்போது என்ன செய்ய முடியும். வெங்காயம், காய்கறிகள் என்று எல்லாமே விலை ஏறித்தான் இருக்கின்றன. இந்நிலையில் விவசாயிகள் நிலையோ வேறாக உள்ளது. இந்த விலை உயர்வு அவர்களுக்கு ஒரு பக்கம் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. அதாவது பச்சை மிளகாய்க்கு பதில் தக்காளி சாகுபடி செய்தால் நல்ல மகசூல் எடுக்கலாம் என்று எண்ணுகின்றனர். 60 நாட்களில் நல்ல மகசூல் எடுத்தாலும் கூட ஒரு கிலோ பச்சை மிளகாய்க்கு மண்டி கமிஷன், ஆள் கூலி எல்லாம் போக கையில் கிடைப்பது 12 ரூபாய் என இருக்கும்.

அதேசமயம், கடந்த ஒரு மாதத்தில் தக்காளி நடவு செய்த விவசாயிகள், இன்னும் ஒரு மாதத்துக்குள் காய் எடுக்கலாம் எனும்போது அவர்களுக்கு நிச்சயம் நல்ல விலை கிடைக்கும் என்று நம்பிக்கையுடன் இருக்கின்றனர். ஆகவே 2 மற்றும் 3 ஏக்கர் நிலத்தில் பச்சை மிளகாய் பயிரிட்டுள்ள விவசாயிகள் இப்போது தக்காளி நடவு செய்யலாமா என யோசனையில் உள்ளனர். அதே சமயம் தக்காளி பல்வேறு வழிகளில் வந்து குவிந்தால் விலை குறைந்து விடும் என்று அச்சப்படவும் செய்கின்றனர்.

தக்காளி பயிரிட அவர்கள் மேலும் கூறும் காரணம், ஒரு கூடைக்கு 15 கிலோ வரையில் தக்காளி இருக்கும். எப்படியும் அடுத்து வரும் சில வாரங்களில் அது 500 ரூபாய்க்கும் குறைவாக போகாது. அதுவே இன்னும் 25-30 நாட்களில் மழை பெய்தாலும் கூட இப்போது நடவு செய்யப்படும் தக்காளிகள் பாதிப்பில்லாமல் தப்பிக்கும். எப்படியும் இன்னும் சில நாட்களுக்கு தக்காளி விலை ஏற்றத்தில் தான் இருக்கப்போகிறது என்கின்றனர். ஆகவே பச்சை மிளகாயை காட்டிலும் நல்ல லாபம் ஈட்டி தரும் என்பதால் தக்காளி நடவு பற்றி தீவிர யோசனையில் இருக்கிறார்கள் விவசாயிகள்.