24 சுங்கச்சாவடிகள் கட்டண உயர்வு – எதிரொலியாக அத்தியாவசிய பொருட்களின் விலை உயரக்கூடும் எச்சரிக்கைசெப் 1-ஆம் தேதி தமிழ்நாட்டில் உள்ள 24 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு என்ற செய்தியுடன் விடிந்துள்ளது.

இது வாகன ஓட்டிகள் மத்தியில் மிகுந்த கவலை அளித்துள்ளது. சுங்கச்சாவடிகளில் 15 ஆண்டுகள் (அ) சாலை அமைத்த முதலீடு திரும்பப் பெறும் வரை மட்டுமே சுங்கக்கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும். அதன்பிறகு 40% கட்டணம் மட்டுமே சாலை பராமரிப்புக்கென வசூலிக்கப்பட வேண்டும். ஆனால், தமிழகத்தில் 15 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட NH ரோடுகளில் உள்ள டோல்களில் அதிக கட்டணம் வசூல் செய்யப்படுகிறது.

அதோடு ஒவ்வொரு வருடமும் 8% லிருந்து 10% வரை கட்டணங்கள் கூட்டப்படுகின்றன. கடந்த செப் 1-ம் தேதி சுங்கக்கட்டணம் 5% முதல் 10% வரை உயர்த்தப்பட்டது. அதே போல் இந்த ஆண்டும் இன்று முதல் (செப்-1) சுங்க கட்டணம் உயர்த்தப்படுகிறது என்று சுங்கச்சாவடிகள் அறிவித்துள்ளன. இந்த கட்டண உயர்வு நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகிறது.

எந்தெந்த சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்கிறது? திருச்சி-சமயபுரம், திருப்பராய்த்துறை (திருச்சி-கரூர்), பொன்னம்பலப்பட்டி (திருச்சி), கரூர் மணவாசி, வேலஞ்செட்டியூர், தஞ்சை வாழவந்தான் கோட்டை, விருதுநகர் புதூர்பாண்டியாபுரம், மதுரை எலியார்பதி, நாமக்கல் ராசம்பாளையம், சேலம்-ஒமலூர், நத்தக்கரை, வைகுந்தம், வீரசோழபுரம், மேட்டுபட்டி, திண்டுக்கல்-கொடைரோடு, தர்மபுரிபாளையம், குமாரபாளையம், விஜய மங்கலம், விழுப்புரம், விக்கிரவாண்டி மொரட்டாண்டி, உளுந்தூர்பேட்டை, செங்குறிச்சி உள்பட 24 சுங்க சாவடிகளில் கட்டணம் உயர்கிறது.

இந்த கட்டண உயர்வால் காய்கறிகள், பழங்கள், அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் ஒரு வாகனம் ஒரு முறை செய்யும் பயணத்திற்கு ரூ.5 – 60 வரை சுங்கக்கட்டணம் செலுத்தவேண்டியுள்ளது. லாரிகளுக்கு விதிக்கப்பட்டிருக்கும் இந்த கூடுதல் கட்டணமானது கடைசியில் நுகர்வோருக்கே சுமையாக அமையும்.

அத்தியாவசிய பொருட்களுக்கு அவர்கள் கொடுக்கும் விலை செப் 2ம் தேதியிலிருந்து அதிகரிக்கும். NHAI எனப்படும் இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சாலைகளை பராமரிக்கும்போது கட்டுமான நிறுவனங்கள் மொத்தவிலை அட்டவணை அடிப்படையில் வருடம் ஒரு முறை கட்டணத்தை உயர்த்தலாம். இருப்பினும் மாநில அரசு இதில் தலையிட்டு சுங்கக்கட்டணம் வசூல் செய்வதில் வெளிப்படை தன்மையை கொண்டு வர வேண்டும் என்று வர்த்தகர்களும், லாரி அஸோசியேஷனும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மேலும் காலவரையை தாண்டியும் கட்டணம் வசூல் செய்யும் தேசிய நெடுஞ்சாலையிலுள்ள சுங்கச்சாவடிகளை மூடுவதற்கு மாநில அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர். சுங்கக்கட்டணம் செலுத்துவதோடு அல்லாமல் ஒவ்வொரு வணிக வாகனத்திற்கும் சாலை வரியாக ரூ.10000-45000 வரை விதிக்கப்படுகிறது. மேலும் அவர்கள் டீசல் வாங்கும் பொது மத்திய அரசு விதிக்கும் cess (சாலை மற்றும் கட்டமைப்புக்கு மேம்பாட்டிற்கு) வரியையும் செலுத்தவேண்டியுள்ளது.

சென்னையிலிருந்து-மதுரை செல்லும் ஒரு பயணத்திற்கு ஒரு ஸ்லீப்பர் பஸ் செலுத்தும் சுங்க வரி மட்டும் எவ்வளவு தெரியுமா? ரூ.1960 ஆகும். அது போக சாலை வாரியாக நாள் ஒன்றுக்கு ரூ.1500-ம் (மாதத்திற்கு ரூ.45000) டீசலுக்கு cess வரியும் செலுத்துகின்றனர். இந்த கட்டண உயர்வுக்கு, பல்வேறு கட்சிகள், ஆம்னி பஸ், லாரி, கார் போன்ற வாகன உரிமையாளர்கள், சரக்கு போக்குவரத்து உரிமையாளர்கள் என அனைவரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

சுங்கச்சாவடிகளிலிருந்து கிடைக்கப்பெறும் வருவாயை சாலை கட்டமைப்பு பணிகளுக்கு பயன்படுத்துவதில் மிகப்பெரிய முறைகேடு நடந்துவருவதாக கருத்து நிலவிவருகிறது. இது குறித்து தமிழக முதலமைச்சரிடம் ஒரு மனு அளித்துள்ளதாகவும் ஒரு கமிட்டி அமைத்து NHAI வசூல் செய்யும் சுங்கவரி பற்றிய விவரங்களை கண்காணிக்கவும், இது வரை வசூல் செய்யப்பட்ட கட்டணத்தொகை எவ்வளவு என்பது பற்றிய விவரங்கள் தெரியவேண்டும் என்றும் லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் S.யுவராஜ் அவர்கள் தெரிவித்துள்ளார்.