“சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை”

உலகம் முன்னேறினாலும் ஏர்த்தொழிலின் பின்னேதான் அது நிற்கிறது – திருவள்ளுவர் பெருமானின் வாய்மொழிக்கேற்ப வரலாற்றிலேயே முதன்முறையாக வேளாண்மைக்கென்று தனியாக ஒரு நிதிநிலை அறிக்கை. தமிழக அசின் இந்த செயல் போற்றுதற்குரியது.


ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு பல்வேறு காரணிகள் உறுதுணையாய் இருந்தாலும் மனித குலத்தின் அறிவு, செயல்திறன்,பண்பு, கலை, கலாச்சாரம் போன்ற பல்வேறு முக்கிய குணங்கள் சீராகவும், மேன்பாகவும் இருக்க அடிப்படை புரட்சி வேளாண்மை அதாவது உழவு சார்ந்த புரட்சியேயாகும். இதன் அடிப்படையிலேயே காடு மலைகளில் வேட்டையாடித் திரிந்த மனிதன் தனது நாகரிகத்தை வளர்த்துக்கொண்டான் என்பது வரலாற்றுப்பூர்வமான உண்மை. உலகமக்கள் யாவருக்கும் உயிர்வாழத் தேவையான உணவை உற்பத்தி செய்துவரும் உழவர் நலம்பெறுதல் என்பதும் அவர்களை ஸ்திரப்படுத்துவதும் நமது நாகரிகத்தையும் தொன்மை வாய்ந்த நமது கலாச்சாரத்தையும் மீட்டெடுக்கும் முயற்சியாகும்.


விவசாயம் என்பது வளமான மண்ணில் பொருட்களை உற்பத்தி செய்வது மட்டுமன்று. தரிசு நிலங்கள் நீர்வளம் குன்றிய இடங்கள் ஆகியவற்றையும் வேளாண் நிலங்களாக மாற்றச்செய்து உணவு உற்பத்தியைப் பெருக்குவதே ஆகும். வேளாண்மைக்கு அடிப்படைத் தேவைகள் மண்வளம் நீர் மற்றும் சூரியஒளி. காடு மலைப்பிரதேசங்களில் உள்ள ஒரு விவசாயி தனது நிலத்திற்கு தேவையான தண்ணீரை கிணற்றுப்பாசனம் மூலமே தீர்த்துக்கொள்கிறான். அதற்கு மின்சாரம் அதிக அளவில் தேவைப்படுகிறது. அதிகரித்து வரும் இந்த மின்சாரத் தேவைக்கு சிறந்த தீர்வாக அமைந்ததே சூரிய சக்தி பம்ப்செட்டுகள். நம் மாநிலத்தில் சூரிய சக்தி அதிக அளவில் கிடைக்கிறது அதனை மின்சக்தியாக மாற்றி வேளாண்மையில் பயன்படுத்தி தன்னிறைவு பெறவே இந்த சூரிய சக்தியால் இயங்கும் பம்புசெட்டுகள் அமைக்கும் திட்டம்.


மின்கட்டமைப்புடன் சாராத தனித்து சூரிய சக்தியால் இயங்கும் பம்புசெட்டுகள் அமைக்கும் திட்டத்தின் கீழ் நடப்பு நிதியாண்டு 2021-22ல் 10 HP வரையிலான 5000 பம்புசெட்டுகள் 70 % மானியத்தில் நிறுவப்படும் என்று நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்திட்டம் 114 கோடியே 68 லட்சம் ரூபாய் செலவில் ஒன்றிய மாநில அரசு நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இத்திட்டத்தைப் பற்றி மேலும் விபரங்களுக்கு சம்பந்தப்பட்ட வருவாய் கோட்டத்தில் உள்ள உதவி செயற்பொறியாளார் வேளாண்மைப் பொறியியல் துறை (அல்லது) மாவட்ட செயற்பொறியாளார் வேளாண்மைப் பொறியியல் துறை அலுவலகங்களில் தொடர்பு கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு http://www.aed.tn.gov.in என்ற இணையதளத்தில் விபரங்களை அறிந்துகொள்ளலாம்.