மத்திய அரசின் பழைய வாகன அழிப்பு கொள்கையை 2021 மத்திய பட்ஜெட்டின் போது நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதிப்படுத்தியது நாம் அறிந்ததே. அதன் படி தனி நபர் வாகனம் 20 ஆண்டுகள் பழமையாகவும் வர்த்தகப் பயன்பாட்டு வாகனங்கள் 15 ஆண்டுகள் பழமையாக இருந்தால் அவற்றை அவர்கள் அழிக்கலாம்.

அவ்வாறு அழிப்போருக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்படும் எனவும் அவர் அறிவித்திருந்தார். பழைய வாகனங்களை அழிப்பதனால் புதிய வாகனங்கள் அதிகளவில் பயன்பாட்டிற்கு வரும். இதனால், காற்று மாசுபாட்டைப் பெருமளவில் கட்டுப்படுத்த முடியும் என அரசும், சமூக ஆர்வலர்கள் பலரும் நம்பிக்கை தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் ‘டாடா மோட்டார்ஸ்’ நிறுவனம் குஜராத் அரசுடன் கூட்டு சேர்ந்து வாகன தகர்ப்பு மையத்தை அகமதாபாத்தில் அமைக்கவிருப்பதாகவும் அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாகவும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.பயணியர் மற்றும் வர்த்தகம் சார்ந்த வாகனங்களை தகர்க்கும் வகையில் இந்த மையம் அமைக்கப்பட உள்ளது. இதில் வருடத்திற்கு 36 ஆயிரம் வாகனங்களை தகர்க்கும் வசதி கொண்டது என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அரசிடமிருந்து பெற வேண்டிய அனைத்து ஒப்புதல்களை பெற்றுத் தரவும், தேவையான உதவிகளை செய்யவும் குஜராத் மாநில துறைமுகம் மற்றும் போக்குவரத்து துறை தயாராக உள்ளது. டாடா மோட்டார்ஸ்-ஐ பொறுத்த வரையில் இம்மையம் அமைப்பது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது