இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை சிறப்பிக்கும் விதமாக ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா சிறந்த வைப்புநிதி திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இது தனிநபர் மற்றும் முதியவர்களுக்கு கூடுதல் வட்டி அளிக்கும் திட்டமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த புதிய திட்டம் “SBI பிளாட்டினம் வைப்புநிதி திட்டம்” என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த சலுகை குறித்த அனைத்து விவரங்களும் SBI இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த வைப்பு கணக்கில் இணைவதற்கு  கடைசி நாள் செப்டம்பர் 14-ம் தேதியாகும்.

இந்த வைப்பு நிதி திட்டத்தில் சேரும் ஒரு தனிநபர் 75 நாட்கள், 75 வாரம், 75 மாதம் என்கிற காலத்தில்  வைக்கும் வைப்புநிதிக்கு 0.15 சதவீதம் கூடுதல் வட்டி பெற முடியும். மேலும் 75 நாட்கள், 525 நாட்கள் மற்றும் 2250 நாட்கள் என்று தாம் விரும்பும் வகையில் காலக்கெடுவை தேர்வு செய்துகொள்ள முடியும். அதன்மூலம் அவர்கள் முதலீட்டின் மேல் கூடுதல் வட்டி பெறமுடியும். 

NRE  &  NRO  உட்பட எந்தவொரு உள்நாட்டு  வைப்புநிதியும்  அதாவது ரூபாய் 2 கோடிக்கும் கீழ் உள்ள வைப்புநிதி எதுவாக இருந்தாலும் இத்திட்டத்தின் கீழ் இணையலாம். புதிய கணக்கு அல்லது ஏற்கனவே உள்ள கணக்குகளை புதுப்பித்தலும் ஏற்புடையது.

75 நாள் காலத்திற்கு ஒரு தனிநபர் ஏற்கனவே பெற்று வரும் வட்டி 3.90 சதவீதம். இந்த சிறப்பு சலுகையின் மூலம் அது இப்போது 3.95 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதே போல் இத்திட்டத்தில் இணையும் முதியவர்கள் 525 நாள் காலத்திற்கு 5.60 சதவீதம் வட்டி பெரும் வாய்ப்புள்ளது. இருப்பினும் 2250 நாட்கள் காலத்திற்கு கூடுதல் வட்டி எதுவும் கிடைக்காது.  இந்த வட்டி மாதாந்திர அல்லது காலாண்டு இறுதியில் வரவு வைக்கப்படும்