தனிநபர்கள், சிறு தொழில் நிறுவனங்கள், தொழில் முனைவோர் ஆகிய பலரது தேவைகளுக்கும் தடையில்லாமல் விரைவாக கடன் வழங்குவதாக இன்று பல டிஜிட்டல் மொபைல் செயலிகள் சந்தையில் வெளிவந்துள்ளன. அவற்றின் செயல்களில் பல சட்ட மீறல்கள் இருப்பதாக பல அறிக்கைகள் வெளிவந்துள்ளன.

இந்நிலையில் கடந்த புதன்கிழமை அன்று ரிசர்வ் வங்கி பொது மக்களுக்கு எச்சரிக்கை அளித்துள்ளது. வங்கிகள், RBI-ல் பதிவு செய்யப்பட்ட வங்கிசாரா நிதி நிறுவனங்கள், பணக்கடன் சட்டம் போன்ற சட்டரீதியான விதிகளின் கீழ் மாநில அரசுகளால் கட்டுப்படுத்தப்படும் நிறுவனங்கள் மட்டுமே யாருக்கும் கடன் வழங்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். பிற அமைப்புகளால் வழங்கப்படும் கடன்கள் சட்ட ரீதியாக தவறானது. இவ்வாறு கடன் வழங்கும் அமைப்புகள் அதிக வட்டி, மறைமுக கட்டணம், கடன் மீட்பு முறைகளை தவறாக கையாள்வது போன்ற செயல்களில் ஈடுபடுவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

ஆகவே இந்த செயல்களுக்கு பொது மக்கள் உடன்பட வேண்டாம் என்று ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது. அதேபோல் அறிமுகம் இல்லாத எவருடனும் KYC ஆவண நகல்களை பொது மக்கள் பகிர்ந்துகொள்ள வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். கடன் வழங்கும் டிஜிட்டல் தளங்கள் சம்பந்தப்பட்ட வங்கி அல்லது NBFC பெயரை வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக வெளியிட வேண்டும் என்பதை ரிசர்வ் வங்கி கட்டாயமாக்கியுள்ளது.

ஏதேனும் டிஜிட்டல் செயலிகளின் செயல்பாட்டில் சந்தேகம் இருந்தால் அந்தச் செயலி சம்பந்தப்பட்ட வங்கிக் கணக்கு விவரங்களை சம்பந்தப்பட்ட சட்ட அமலாக்க நிறுவனங்களுக்கு பொதுமக்கள் புகாரளிக்கலாம். http://sachet.rbi.org.in என்ற வலைதளத்தில் ஆன்லைன் மூலமாகவும் புகாரைப் பதிவு செய்யலாம்