சென்ற வருடம் 2019-20ம் ஆண்டுகளில் பாராளுமன்றத்தில் தொழிலாளர் சட்டங்களில் மாற்றங்கள் ஏற்படுத்தும் புதிய விதிகள் நிறைவேற்றப்பட்டன. அதன்படி, தொழில் துறை உறவுகள், ஊதியம், சமூக பாதுகாப்பு, தொழில்சார் சுகாதார பாதுகாப்பு, பணி நிலவரம் ஆகியவற்றில் இந்த புதிய விதிகள் அறிவிக்கப்பட்டன.இதில் முக்கியமாக ஒரு வாரத்தில் வேலை நாட்கள் நான்காகக் குறைக்கப்படும்.

அதே சமயம் பணி நேரம் 12 மணி நேரமாக உயர்த்தப்படும். விடுமுறையாக 3 நாட்கள் கிடைக்கும். ஊதியத்தில் சில மாற்றங்களை எதிர்பார்க்கலாம். இந்த விதிகள் அக்டோபர் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அடிப்படை ஊதியம், இதர படிகள் தலா 50% என்ற அடிப்படையில் கணக்கிடப்பட்டு வழங்கப்படும். 50% அடிப்படை ஊதியத்திற்கு PF எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கணக்கிடப்படும்.

இந்த கணக்கீட்டில்படி PF கணக்கில் தொகை கூடுதலாக செலுத்தப்பட்டு இருப்பு நிலை உயரும் ஆனால் தொழிலாளர்களுக்கு பிடித்தம் போக கிடைக்கும் மாதாந்திர ஊதியம் குறைவாக இருக்கும். இந்த திட்டம் PF-ஐ பொறுத்தவரையில் சாதகமாகவும் கையில் கிடைக்கும் வருமானத்தைப் பொறுத்தவரையில் பாதகமாகவும் இருக்கும். சொற்ப சம்பளம் வாங்கும் சராசரி குடிமகன் மாத செலவினங்களை சமாளிப்பதில் திண்டாட வேண்டி வரும். பல்வேறு காரணங்களால் கடந்த ஏப்ரல் மாதம் செயல்படுத்தமுடியாமல் போனாலும் வரும் அக்டோபரில் இந்த விதியை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இன்னொரு சிக்கல் என்னவென்றால் 300 தொழிலாளர்களுக்கும் அதிகமாக உள்ள தொழில் நிறுவனங்கள் செலவுகளை குறைப்பது, ஆட் குறைப்பு செய்வது அல்லது வேறு காரணங்களால் நிறுவனத்தை மூடுவது போன்ற நடவடிக்கைகளுக்கு இனி அரசின் அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை என்ற நிலை உள்ளது. இதனால் பல தொழிலாளர்கள் வேலை இழக்கும் சூழல் ஏற்படலாம், அல்லது குறைக்கப்பட்ட சம்பளத்தை பெறலாம். ஏற்கனவே கொரோனாவின் இரண்டு அலைகளை எதிர்கொண்ட தொழிலாளர்கள் வாழ்வாதாரமாக உள்ள வேலையையும் இழக்காமல் இருந்தால் நன்மையே.