மத்திய அரசு யூனியன் பட்ஜெட் 2021-22-ல் ஆட்டோ டீலர்ஷிப் நிறுவனங்களும் MSME-ன் கீழ் இணைந்திடலாம் என்று அறிவித்திருந்தது. இருப்பினும் இன்னும் நிறைய நிறுவனங்கள் இதில் இணையாமல் உள்ளனர். MSME நிறுவனங்களுக்கு கடன் வசதி திட்டம் முதற்கொண்டு பல திட்டங்களை அரசு அறிமுகம் செய்திருந்தாலும் முறைப்படி அவர்கள் இத்திட்டத்தில் பதிவு செய்தால் மட்டுமே அந்த சலுகைகளை பெற முடியும். CRISIL ஏஜென்சியின் கணக்கெடுப்பின்படி 67% இரு சக்கர டீலர் கம்பெனிகள் இன்னமும் MSMEல் பதிவு செய்துகொள்ளவில்லை.

பல ஆட்டோ டீலர்ஷிப் நிறுவனங்களுக்கு இந்த கடன் திட்டங்களை பற்றி விவரங்கள் தெரியாமல் உள்ளது. இன்னும் பலர் MSME பதிவுக்கான செயல்முறைகளில் தெளிவடையாமல் விட்டுவிடுகின்றனர். இரு சக்கர வாகன டீலர்கள் மட்டுமல்லாது 54 சதவீத பயணியர் வாகன டீலர்களும் இந்த திட்டங்கள் பற்றி அறிந்திடமால் உள்ளனர்.

அதனால் அரசின் திட்டங்களை இன்னமும் இவர்களால் பயன்படுத்தி கொள்ள முடிவதில்லை. FADA அமைப்பு MSME பதிவு முறைகள் பற்றிய விளக்கங்களையும், அரசு அளித்து வரும் கடன் உதவி திட்டங்களையும் பற்றி தொடர்ந்து இந்த டீலர்ஷிப் நிறுவனங்களுக்கு தெரியப்படுத்தி வருகிறது. பலர் இந்த தொழிலுக்கு புதிதாக இருகின்றனர்.

சில நிறுவனங்கள் தொழிலுக்குள் நுழைந்து குறுகிய காலத்திலேயே வெளியேறிவிடுகின்றனர். அவ்வாறு உள்ளவர்களை கண்காணிப்பது சில சமயங்களில் கடினமாக இருந்தாலும் தொடர்ந்து அனைவருக்கும் இத்திட்டம் பற்றி விவரங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. நாடு முழுவதும் சுமார் 30000 டீலர்ஷிப் நிறுவனங்கள் உள்ளன. அனைவரும் பதிவு செய்வதற்கு இன்னும் காலம் படிக்கும் என்று FADA அமைப்பின் CEO சாஹர்ஷ் தமானி பத்திரிக்கைக்கு கூறியுள்ளார்.

அரசு அறிவிப்பின்படி MSMEல் பதிவுசெய்த ஒரு ஆட்டோ டீலர்ஷிப் நிறுவனம் கடன் உத்தரவாதம், பிணையற்ற கடன்கள், வட்டியில் மானியம் போன்ற பல உதவிகளை பெற முடியும். ஆனால் இதுவரை பதிவு செய்த நிறுவனங்கள் கூட இந்த உதவிகளை பெற முயலவில்லை. கடன் திரும்பச்செலுத்துவதில் கால அவகாசம் மட்டுமே பெறுகின்றனர். ஆட்டோ டீலர்ஷிப் நிறுவனங்களின் தொழிலுக்கு வேண்டிய வசதிகளை அரசு செய்ய முன்வரும் சூழ்நிலையில் தகுந்த முறையில் அதை பயன்படுத்தி கொள்வது அவர்கள் கடமை.