மரமென்றால் மண்ணிலே நிலைத்து நிற்க வேண்டாமோ…”

என்ற முருங்கைக்கான தமிழ்க்கவிதையை நினைவு கூறுவோம். முருங்கை தமிழகத்தின் மற்றுமொரு பெருமை.

முருங்கை பற்றி அறியாதவர் யாரும் இலர் என்று சொல்லும் வண்ணம் பல்வேறு அருமைகளை தனதாக்கி உள்ள தாவரம் முருங்கை. உணவிற்கு மட்டும் பயன்படுவதன்று இம்முருங்கை. முன்னூறுக்கும் மேற்பட்ட நோய்களை குணப்படுத்தும் அருமருந்தாக நமது சித்த, ஆயுர்வேத மருத்துவத்தில் இடம்பெற்றுள்ளது.

தமிழகத்தைப் பொறுத்தவரையில் முருங்கை மரம் இல்லாத இடத்தை காண்பதென்பது இயலாத ஒன்று. இதன் பெருமையை உணர்ந்தவர் இந்தியா மட்டுமல்லாது அயல் நாடுகளிலும் உள்ளனர். முருங்கையின் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களுக்கு உலகளவில் அதிக வரவேற்புள்ளது. ஆகவே, தமிழகத்தில் முருங்கை பெருமளவில் விளையக்கூடிய தேனி, மதுரை, திண்டுக்கல், தூத்துக்குடி, அரியலூர், திருப்பூர் மற்றும் கரூர் ஆகிய 7 மாவட்டங்கள் ‘முருங்கைக்கான ஏற்றுமதி மண்டலம்’ என்று அறிவிக்கப்படும் என்று தமிழக அரசின் 2021-22-ம் ஆண்டு வேளாண் பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் முருங்கை சாகுபடி அதிகரித்து 5 வருடங்களில் ரூபாய் 50,000 கோடி வருவாய் ஈட்டித்தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முருங்கை ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புகளை அதிகரிக்க முருங்கைக்கென ‘சிறப்பு ஏற்றுமதி சேவை மையம்’ அமைக்கப்படும். முதல்கட்டமாக இத்திட்டம் மதுரை மாவட்டத்தில் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் மாநில அரசின் நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும். முருங்கை விவசாயிகள், ஏற்றுமதியாளர்கள், இறக்குமதி செய்யும் நாடுகளிலுள்ள வணிகர்களின் விவரங்கள் அனைத்தும் சேகரிக்கப்பட்டு ஏற்றுமதி சந்தை இணைப்புகள் வலுப்படுத்தப்படும்.

ஒவ்வொரு நாடுகளும் பிரத்தியேக தர நிர்ணயங்களைக் கொண்டிருக்கும். அவை பற்றிய விவரங்கள், முருங்கை ஏற்றுமதியாளர்கள் பின்பற்றபடவேண்டிய விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள், ஒன்றிய அரசின் அபீடா (APEDA) நிறுவனத்தின் மூலம் அளிக்கப்படும் திட்டங்கள் குறித்த விவரங்கள் ஆகிய அனைத்தும் இந்த சேவை மையம் வழங்கும். மேலும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை தயாரித்திட தேவையான உலர்த்திகள் (Dryer)  இலைகளை பொடியாகும் இயந்திரங்கள் (Pulveriser)  தானியங்கி சிப்பம் காட்டும் இயந்திரம் போன்ற கட்டமைப்பு வசதிகள் செய்யப்படும் என்றும் பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

சித்தர்கள் முருங்கையை கற்பகத்தரு என்று கூறுகின்றனர். வீட்டிற்கு ஒரு முருங்கை வளர்ப்போம்! ஆரோக்கியத்தை காப்போம்!!