விமான சேவையில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக இருந்த ஜெட் ஏர்வேஸ் தனது சேவையை மீண்டும் துவங்க இருக்கிறது என்ற மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது.

2022-ஆம் ஆண்டு முதல் காலாண்டில் உள்நாட்டு விமானப்போக்குவரத்து சேவை புதுடில்லி-மும்பை இடையே துவங்கப்பட உள்ளது.  மேலும் வெளிநாட்டு சேவையை அடுத்த அரையாண்டில் செயல்படுத்த திட்டமிட்டுள்ளனர்.

ஏற்கனவே பெறப்பட்டிருக்கும் AOC (Air Operator Certificate) மறுமதிப்பீடு செய்யப்பட்டு இந்த போக்குவரத்து சேவை மீண்டும் புத்துயிர் பெற ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

2022 முதல் காலாண்டில் உள்நாட்டு சேவையும் 3 மற்றும் 4-வது காலாண்டில் வெளிநாட்டு போக்குவரத்து சேவையை இந்நிறுவனம் மீண்டும் துவங்க ஆயத்த ஏற்பாடுகள் நடைபெறுகிறது. ஜெட் ஏர்வேஸ் 2.0 அடுத்த 3 ஆண்டுகளில் 50க்கும் அதிகமாகவும் 5 ஆண்டுகளில் 100க்கும் மேல் விமான சேவைக்கு திட்டமிட்டுள்ளது. இந்த திட்டமிடல் மிகச்சரியாக செயலாற்றப்படும் என்று கூறியுள்ளார் முராரி லால் ஜலான். இவர் UAE தொழிலதிபர், லண்டனை அடிப்படையாக கொண்ட ஜலான் கல்ராக் கூட்டமைப்பின் முன்னணி உறுப்பினர் மற்றும் ஜெட் ஏர்வேஸின் நிர்வாகம் சாராத தலைவராக முன்மொழியப்பட்டிருப்பவர்.

விமான போக்குவரத்து சேவையில் இது ஒரு வரலாற்று நிகழ்வாகவே கருதப்படுகிறது.

ஜெட் ஏர்வேஸின் மறுமலர்ச்சி திட்டத்திற்கு NCLT கடந்த ஜூன் மாதத்தில் ஒப்புதல் அளித்துள்ளது. அதேபோல் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு கடன் கொடுத்திருந்தவர்கள் இந்த திட்டத்திற்கு கடந்த அக்டோபர் மாதத்திலேயே ஒப்புதல் அளித்திருந்தனர்.

இந்நிறுவனத்தின் தலைமையகம் டெல்லி NCR-லும் முக்கிய மேலாண்மை அதிகாரிகள் அதன் கார்ப்பரேட் அலுவலகத்தில் கூர்கானில் இருந்து செயல்படுவார்கள் என்றும் தெரிய வந்துள்ளது.

இதில் பணியாற்றுவதற்கு 150க்கும் மேல் முழு நேர பணியாளர்கள் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இன்னும் அனைத்து பிரிவுகளுக்கும் தேவையான 1000க்கும் மேற்பட்ட பணியாளர்கள் நடப்பு நிதியாண்டில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று தெரிகிறது. பணியாளர்கள் அனைவரும் ஒவ்வொரு கட்டமாக தகுதியின் அடிப்படையிலேயே தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள்.