சிறு குறு தொழில்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில் நிறுவனங்களும் தன் தனித்திறமையை வெளிக்காட்ட வாய்ப்பு கொடுக்கும் முக்கிய மாநகரங்களில் ஒன்றாக இருப்பது கோயம்புத்தூர். அந்த கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற அரசு விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டார்.

இந்த விழாவில் இடம் பெற்ற முக்கிய நிகழ்வுகள் – 70 முடிவுற்ற திட்டப்பணிகள் (மதிப்பு – ரூ.587.91 கோடி) திறந்து வைக்கப்பட்டன, 128 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நடப்பட்டது (மதிப்பு – ரூ.89.73 கோடி), பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குதல் ஆகியவை.

முடிவுற்ற திட்டப் பணிகள் இடம்பெற்ற துறைகள் –
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், பொதுப்பணித் துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, வேளாண்மை பொறியியல் துறை, கூட்டுறவுத் துறை, பள்ளிக்கல்வித் துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை

அடிக்கல் நாட்டிய புதிய திட்டப் பணிகள் இடம் பெரும் துறைகள் –
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, பொதுப்பணித் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், கூட்டுறவுத் துறை ஆகியவை.

பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் – வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், கூட்டுறவுத் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு துறைகளின் சார்பில் 25123 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இந்த விழாவை தொடர்ந்து தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு மாபெரும் அளவில் நடக்கவிருக்கின்றது. இதில் 34723 கோடி மதிப்பீட்டில் 52 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன. இதன் மூலம் சுமார் 74000க்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்பு பெறுவர். 7 நிறுவனங்களுடன் வான்வெளி மற்றும் பாதுகாப்புத் துறை புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் நடைபெறும். இதன் மதிப்பு 485 கோடி. இன்னும் பல சிறப்பம்சங்களுடன் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் தொழில்துறை மேன்மேலும் வளர்ச்சிப்பாதையில் செல்வதற்கு இது உறுதுணையாக அமையும்.

இந்த மாநாட்டில் தமிழ்நாடு நிதி நுட்பக் கொள்கை 2021 மற்றும் TNSWP – தமிழ்நாடு ஒற்றைச் சாளர கைபேசி செயலி ஆகியவை வெளியிடப்படுகிறது.