பசுமை சக்தியை புதிய பிராஜக்ட் மற்றும் பல விரிவாக்கங்களுக்கு பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டி வரும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் சுத்திகரிப்பு திறனை அதிகரிக்க   

  1 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்ய திட்டமிட்டிருப்பதாக அறிக்கை விடுத்துள்ளது. அடுத்து வரும் ஆண்டுகளில் தொடர்ந்து எரிபொருள் தேவை அதிகரிக்கும் வாய்ப்புள்ளதால் இந்த  திட்டம் விரைவில் செயல்படவிருக்கிறது.

நிறுவனத்தின் தலைவர், ஸ்ரீகாந்த் மாதவ் வைத்யா அவர்கள் நடந்து முடிந்த பங்குதாரர்களுக்கான ஆண்டு கூட்டத்தில் பங்கேற்று இவ்வாறு தெரிவித்து உள்ளார்.  கொரோனாவிற்கு முந்தய நிலைக்கு மெல்ல மெல்ல திரும்பியிருக்கும் பெட்ரோல் டீசல் தேவையானது தீபாவளி பண்டிகைக்குள் இயல்பு நிலைக்கு திரும்பும் என்றும் கூறியிருக்கிறார்.

மேலும் அவர் கூறுகையில், பல நிறுவனங்களின் கருத்துக்கணிப்பின்படி இந்தியாவில் 2040-ஆம் ஆண்டில் எரிபொருள் தேவை 400-450 மில்லியன் டன் என்று இருக்கும். இது தற்போது 250 மில்லியன் டன்னாக உள்ளது.  இந்த தேவையை கருத்தில் கொண்டு IOC புதிய திட்டங்களை செயல்படுத்த தீவிரமாக இறங்கியுள்ளது.

அதிகரிக்கும் எரிபொருள் தேவையை பூர்த்தி செய்வதற்கு IOC 11 சுத்திகரிப்பு நிறுவனங்களை நிறுவியுள்ளது. இந்த ஆலைகள் கச்சா எண்ணெயை மதிப்புள்ள எரிபொருட்களாக (பெட்ரோல், டீசல்) மாற்றம் செய்கின்றன.  இவையனைத்தும் சேர்ந்த 81.2 மில்லியன் டன் சுத்திகரிப்பு நடைபெறுகிறது.

குஜராத் மாநிலத்தில் உள்ள சுத்திகரிப்பு தளத்தின்  தற்போதய திறன் 13.7 மில்லியன் டன் அதனை 18 மில்லியன் டன்னாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல் ஹரியானாவில் உள்ள தளத்தின் தற்போதைய திறனான 15 மில்லியன் டன்னிலிருந்து 25 மில்லியன் டன்னாக உயர்த்தப்படும். கௌஹாத்தி மற்றும் பரௌனியில் உள்ள தளங்களும் விரிவாக்கம் செய்யப்படும். புதிய தளம் ஒன்றும் துணைநிறுவனம், சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (CPCL)-ல் அமைக்கப்படும் என்றும் தெரிகிறது. மேற்கூறிய இந்த விரிவாக்கம் IOC-ன்  சுத்திகரிக்கும் திறனை  106.7 மில்லியன் டன் அளவுக்கு எடுத்துச்செல்லும் என்று தெரிகிறது.