சர்வதேச சந்தையில் நிர்ணயிக்கப்படும் கச்சா எண்ணெயின் விலையை பொறுத்தே பெட்ரோல், டீசல் விலை இருக்கும். கடந்த சில மாதங்களாகவே பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து மக்களை வாட்டி வருகின்றது. இந்த விலை ஏற்றத்தை குறைப்பதற்காக உற்பத்தியை அதிகரிக்குமாறு ‘ஓபெக்’ (பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் அமைப்பு) அமைப்பிடம் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தின. ஆனால் ஓபெக் மற்றும் நட்பு நாடுகள் மறுத்துவிட்டன.

ஆகவே விலையை குறைப்பதற்கு வேண்டி இருப்பில் உள்ள கச்சா எண்ணெயை விடுவிக்கும்படி இந்தியா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளிடம் அமெரிக்கா கேட்டுக்கொண்டது. அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு இந்தியா 50 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெயை விடுவிக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

மத்திய பெட்ரோலியத்துறை அதிகாரி ஒருவர் “நம் நாட்டின் கிழக்கு மற்றும் மேற்கு கடற்கரை பகுதிகளில் 3.8கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் சேமிப்பில் உள்ளது. அவற்றிலிருந்து முதல் முறையாக அவசர கால தேவைக்கென 50 லட்சம் பீப்பாய் விடுவிக்கபட முடிவு செய்யப்பட்டுள்ளது. இன்னும் 10 நாட்களில் இருப்பில் உள்ள இடத்திலிருந்து பைப் வழியாக மங்களூர் சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோ கெமிக்கல், ஹிந்துஸ்தான் பெட்ரோலிய கழகம் ஆகிய நிறுவனங்களுக்கு நேரடியாக வழங்கப்படும்.” என்று கூறினார்.