தமிழகம் விவசாயத்தை முதுகெலும்பாக போற்றக்கூடிய மாநிலங்களில் ஒன்று. வேளாண்மை மேம்பாட்டு திட்டங்களே அடிப்படையில் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை என்று பல சீரிய திட்டங்களை செயல்படுத்தி  வருகிறது நமது தமிழக அரசு.

இந்நிலையில் சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்த ஆய்வு கூட்டத்தில் தலைமையேற்று பேசிய மின்சார துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அவர்கள் தமிழகத்தில் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு அவர்கள் மேம்பாட்டிற்காக தமிழக முதல்வர் அவர்கள் ஆணையின்படி 1 லட்சம் மின்சார இணைப்புகள் வழங்க இருப்பதாக கூறினார். இத்திட்டம் நடப்பு நிதியாண்டிலேயே 2021-22 (மார்ச் மாதத்திற்குள்) செயல்படுத்தப்படும் என்றும் அறிவித்தார்.

ஏற்கனவே பல விவசாயிகள் மின்சார இணைப்பு வேண்டி பதிவு செய்து காத்திருக்கின்றனர். ஆகையால் அனைத்து மின்இணைப்புகளும் பதிவு மூப்பு அடிப்படையிலேயே வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். மின் இணைப்பு வழங்கப்படுவது குறித்து மின்சார வாரியத்தில் இருந்து உரிய அறிவிப்பு கடிதம் பதிவு செய்துள்ள விவசாயிகளுக்கு முறைப்படி அனுப்பி வைக்கப்படும்.

விவசாயிகள் நிலம் மற்றும் கிணறு ஆகியவற்றின் மீது அவர்களுக்கு இருக்கும் உரிமை சம்பத்தப்பட்ட ஆவணங்களை பிரிவு அலுவலரிடம் காண்பித்தல் அவசியம். மோட்டார், கெப்பாசிட்டர் ஆகிய சாதனங்களை விவசாயிகள் வாங்கி பொருத்தி கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும். தமிழக அரசு மின் கட்டணத்தை மானியமாக மின்சார வாரியத்துக்கு வழங்குமாதலால் விவசாயிகளுக்கு மின்சாரம் இலவசமாக கிடைக்கும்.

இத்திட்டத்தின் மூலம் விவசாயிகள் பலரும் மின்கட்டணம் என்ற பளுவிலிருந்து விடுதலை பெறுவர் என்று அமைச்சர் தெரிவித்தார்.