தேசிய பால்பண்ணை மேம்பாட்டு வாரியம் (National Dairy Development Board – NDDB) e-GOPALA & IMAP எனும் வலைத்தளங்களை கடந்த சனிக்கிழமை அறிமுகப்படுத்தியுள்ளது.  மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை மத்திய மந்திரி பருஷோத்தம் ரூபலா அவர்கள் இந்த வலை தளம் மற்றும் மொபைல் ஆப்-ஐ துவங்கி வைத்தார். அப்போது NDDB தலைவர் மீனேஷ் ஷாஹ் அவர்களும் உடன் இருந்தார்.

இது மொபைல் செயலியாகவும் செயல்படுகிறது.  இது முழுக்க முழுக்க கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டிருக்கும் விவசாயிகளுக்கு உற்ற நண்பனாகவும் ஒரு சிறந்த வழிகாட்டியாகவும் இருக்கும் என மத்திய அரசு கூறுகிறது.  விவசாயம் மற்றும் அதனுடன் செயல்படும் மற்ற நடைமுறைகளில் கால்நடை பராமரிப்பு இன்றியமையாத ஒன்று. விவசாயிகள் இதன் மூலம் இருமடங்கு வருமானம் ஈட்டும் வாய்ப்பு உள்ளது. விலங்குகளிடமிருந்து கிடைக்கும் பால் உற்பத்தி அதிகரிக்கும் பட்சத்தில் விவசாயியின் வருமானமும் தாமாகவே உயரும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

தனது கைபேசி எண்ணை இந்த செயலில் பதிவு செய்வதன் மூலம் கால்நடை வளர்ப்பில் பல விவரங்களை ஒரு  விவசாயி பெறமுடியும் என்பதே இதன் சிறப்பு. அப்படி என்னென்ன விவரங்கள் பெறலாம் என்பதை இப்போது பார்க்கலாம் :

  • விலங்குகளின் ஊட்டச்சத்துகள் – முதன்மையானது முதல் அனைத்து தகவல்கள்
  • விலங்குகளின் உணவு பற்றிய தகவல்கள்
  • ஆயுர்வேத மருத்துவ நடைமுறை
  • நோய் இல்லாத தரமான விந்து மற்றும் கருமுட்டைகளை வாங்க மற்றும் விற்பனை செய்ய
  • விலங்குகளின் நோய்கள் மற்றும் சிகிச்சை முறை
  • செயற்கை கருவூட்டல் மற்றும் கால்நடை முதலுதவி, தடுப்பூசி
  • அடுத்த தடுப்பூசி, பேறுகாலம் மற்றும் கன்று ஈறும் தேதிக்கு முன்கூட்டியே விழிப்புணர்வு குறுஞ்செய்தி அனுப்புதல் 
  • அரசாங்கத்தின் பல்வேறு திட்டங்கள் மற்றும் சேவைகள் பற்றிய தகவல்கள் குறுஞ்செய்தியாக
  • விவசாயிகள் அருகிலுள்ள நோய்த் தடுப்பு முகாம்கள் அல்லது பயிற்சி திட்டங்கள் பற்றிய தகவல்களைப் பெறலாம்.
  • செயற்கை கருவூட்டல் தொழில்நுட்ப வல்லுநர்கள் பற்றிய தகவல்களையும் வழங்குகிறது.