பாரதி ஏர்டெல் தனது நிறுவன பங்குகளை விற்பனை செய்வதன் மூலம் தனது மூலதனத்தை ரூ.21000 கோடியாக உயர்த்தவிருக்கிறது. இந்த பங்குகளை ஏற்கனவே முதலீடு செய்துள்ள பங்குதாரர்களுக்கே விற்பனை செய்யும் என்றும் தெரிய வருகிறது.  தனது பண இருப்பை வலுவாக்குவதன் மூலம் சட்டபூர்வமாக தாம் செலுத்த வேண்டிய நிலுவைத்தொகையை செலுத்தவும், தனது வலைத்தள சேவையை விரிவாக்கவும், உறுதிப்படுத்தவும், 5G அலைக்கற்றைக்கான ஏலத்தில் பங்கேற்க தயார்படுத்திக்கொள்ளவும் முடியும் என்று இந்நிறுவனம் கருதுகிறது.

இதன் படி இந்நிறுவனத்தின் பங்குதாரர்கள் ஒவ்வொரு 14 பங்குகளுக்கு 1 பங்கு என்ற விகிதத்தில் ரூ.535 மதிப்புள்ள புதிய பங்குகளை பெறுவார்கள் என்று சுனில் மிட்டல் அவர்கள் கடந்த ஞாயிறு அன்று பங்குச்சந்தைக்கு தெரிவித்தார். கடந்த வெள்ளிகிழமை நாள் முடிவில் BSE-ஐ பொறுத்தவரை இந்நிறுவனப் பங்கு விலை ரூ.593.95-ஆக இருந்தது. எனவே புதிய பங்குகளுக்கான மதிப்பு 10 சதவீதம் வரை தள்ளுபடியுடன் கூடியதே.

இந்த அறிவிப்பு வெளியிட்ட அடுத்த நாளே அதன் பங்கு மதிப்பு ஆரம்ப நிலையில் 2.6% அதிகரித்துள்ளது.