வங்கி ஊழியர்கள் குடும்ப ஓய்வூதியத்தை, ஓய்வு பெறும் போது பெறப்பட்ட ஊதியத்தின் 30% வரை உயர்த்துவதற்கான இந்திய வங்கி சங்கத்தின் முன்மொழிவுக்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி NPS பங்களிப்பில் அரசு செலுத்தும் பங்கு அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த அறிவிப்பால் வங்கி ஊழியர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மும்பையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் நிதி அமைச்சகத்தின் செயலாளர், நிதி சேவைகள் துறை செயலாளர் ஆகியோர் கூறியதாவது : “வங்கி ஊழியர்களின் குடும்ப ஓய்வூதியம் ரூ.30,000 லிருந்து ரூ.35,000 வரை உயரும், NPS பங்களிப்பு 40% அதிகரிக்கும், தற்போது, ​​பொதுத்துறை வங்கிகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வூதிய நிதியில் (NPS) வங்கிகளின் பங்களிப்பு 10%. இப்போது இது 14% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் ஊழியரின் குறைந்தபட்ச பங்களிப்பு 10% ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த பங்களிப்பு அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படி அடிப்படையில் இது கணக்கிடப்படுகிறது.

வங்கி ஊழியர்களின் ஓய்வூதிய நிதி தவிர, அவர்கள் இறந்த பிறகு கிடைக்கும் குடும்ப ஓய்வூதியம் சம்பந்தமான விதிகளையும் மத்திய நிதி அமைச்சகம் மாற்றியுள்ளது. ஒரு வங்கி ஊழியர் இறந்தால் அவர் கடைசி சம்பளத்தில் 30% குடும்ப ஓய்வூதியமாக இனி கிடைக்கும்.

மேற்கண்ட இந்த அறிவிப்பால் வங்கி ஊழியர்களின் ஓய்வூதிய நிதி மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வூதிய நிதிக்கு சமமாக இருக்கும் என்று தெரியவருகிறது.