கணக்குகள் ஒருங்கிணைத்தல் நெட்வொர்க் எனும் நிதி சார்ந்த தரவுகள் பரிமாற்ற முறையைக் கடந்த வாரம் இந்தியா அறிமுகம் செய்தது. ஒரு வெளிப்படையான வங்கிமுறையை இந்தியாவில் கொண்டு வரும் நோக்கில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் இந்த திட்டம் தனி நபர் நலன் மற்றும் பாதுகாப்பு இரண்டையும் கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.  முதலீடு செய்வது மற்றும் கடன் பெறுவதில் வாடிக்கையாளர்கள் பிரச்சினைகளுக்கு தீர்வளிக்கும் விதத்தில் இத்திட்ட நடைமுறைகள் இருக்கும். இத்திட்டத்தில் இணையும் நபர்  தரவு பகிர்தலில் இருக்கும் ஒவ்வொரு படிக்கும் தனது ஒப்புதலை தரவும், மறுக்கவும் முடியக்கூடிய வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆகவே ஒரு தனிநபர் நிதி சார்ந்த தனது விவரங்களின் மீது முழு அதிகாரம் கொண்டவராகவே இருக்க முடிகின்றது.

Account Aggregator அதாவது கணக்குகள் ஒருங்கிணைப்பாளர் முறை (AA) என்பது ரிசர்வ் பாங்க் ஆஃப் இந்தியா முறைப்படுத்தியுள்ள அமைப்பு.  ஒரு தனி நபர் வைத்திருக்கும் பல வங்கிக் கணக்குகளை ஒருங்கிணைத்து நெட்வொர்க் முறையில் நிதி சார்ந்த சேவைகளை பெறும் வசதி இதன்மூலம் இந்தியாவில் அறிமுகமாகிறது. முதல்கட்டமாக 8 வங்கிகள் இச்சேவையை வாடிக்கையாளர்களுக்கு வழங்கவிருக்கின்றன. இம்முறை தனி நபருக்கு பாதுகாப்பாகவும், டிஜிட்டல் முறையில் எளிதாகவும் இருக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு நிதி நிறுவனத்திலிருந்து முறைப்படுத்தப்பட்ட இதர நிதி நிறுவனத்திற்கு AA நெட்வொர்க் மூலம் தகவல் பரிமாற்றம் செய்யப்படும். இதில் முக்கிய அம்சமாக தனிநபர் ஒப்புதலின்றி எந்தவொரு தகவல்களும் பகிரப்படாது. ஒவ்வொரு பயன்பாட்டையும் தேர்வு செய்யும் அனுமதி வழங்கப்படுகிறது.

தற்போது நடைமுறையில் இருக்கும் பல சிக்கல்களையும் தாமதங்களையும் அகற்றும் விதமாக இந்த நெட்வொர்க் சேவை அமையும். வங்கி ஆவணங்களை பகிர்தல், நோட்டரி கையொப்பம், பத்திர ஆவணங்கள், கடவுச்சொல் பகிர்தல் போன்ற பல விஷயங்களில் இதன் அணுகுமுறை மாற்றம் செய்யப்பட்டு பாதுகாப்பான முறையில் எளிமையாக்கப்பட்டுள்ளது.

தற்போது Axis, ICICI, HDFC, Indusland, SBI, Kotak Mahindra, IDFC First bank, Federal Bank ஆகிய 8 வங்கிகள் இந்த இணைப்பை பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இதில் முதல் நான்கு வங்கிகளும் தகவல்கள் பரிமாற்றத்தை மேற்கொண்டு வருகின்றன.

தற்சமயம் ஒரு தனி நபரின் Savings  மற்றும் Current account-ல் நடைபெற்ற பரிவர்த்தனை விபரங்கள் வங்கிகளிடையே பகிர்ந்து கொள்ளப்பட்டு அவை அனைத்தும் இணையத்திற்கு நேரடியாக கொண்டு செல்லப்படுகின்றன.

பின் படிப்படியாக நிதி சார்ந்த அனைத்து தகவல்களும் அதாவது வரி, ஓய்வூதியம், காப்பீடு, மியூச்சுவல் ஃபண்ட்ஸ் போன்ற பத்திரங்கள் ஆகிய அனைத்துமே வாடிக்கையாளர் பயன்பெறும்  வகையில் கிடைக்கப்பெறலாம். மேலும் ஆரோக்கியம் மற்றும் தொலைத்தொடர்பு போன்ற துறைகள் பற்றிய தகவல்களும் கிடைக்கும் வகையில் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த அனைத்து பகிர்தல்களும் கணக்கு ஒருங்கிணைப்பாளர் தன்னிச்சையாக செய்ய முடியாது. தனி நபரின் வழிகாட்டுதல் மற்றும் ஒப்புதலின் அடிப்படையிலேயே  நடைபெறும். அதேபோல் வாடிக்கையாளருக்கு தகவல்கள் பகிரப்படுவதில் விருப்பமில்லையென்றால் அவர் அதை நிராகரிக்கும் வசதியும் உள்ளது.

Finvu, OneMoney, CAMS Finserv மற்றும் NADL ஆகிய நான்கு செயலிகள் தற்சமயம் செயல்பாட்டு உரிமம் பெற்ற கணக்கு ஒருங்கிணைப்பாளர்களாக இருக்கின்றன. PhonePe, Yodlee மற்றும் Perfios ஆகிய மூன்றும் RBI இடமிருந்து முதல்கட்ட  ஒப்புதலை பெற்று விரைவில் தொடங்க ஆயத்தமாக உள்ளன. வாடிக்கையாளர் இதில் ஏதாவதொரு செயலி அல்லது இணையதளம் மூலம் பதிவு செய்து கொள்ளலாம். இதற்குரிய சேவை கட்டணமானது ஒவ்வொரு கணக்கு ஒருங்கிணைப்பாளர் நிறுவன விதிமுறைகளை பொறுத்து மாறுபடும். இந்த திட்டத்தில் இணைவதன் வாயிலாக தனி நபர் கடன் மற்றும் சிறு வியாபார கடன்பெறும்போது இருக்கும் நடைமுறை கடினங்கள் அவசியமற்று போகும். நேரம் மிச்சமடைகின்றது. தேவைப்படும் அனைத்து விவரங்களும், தகவல்களும் பாதுகாப்பான முறையில் டிஜிட்டல் முறையில் விரைவில் கிடைக்கப்பெறுவதால் வாடிக்கையாளர் விரைந்து கடன்பெற வாய்ப்பு உள்ளது. இன்னும் பல சிறப்பம்சங்களையும், வசதிகளையும் கொண்டதாய் அமைந்துள்ளது இந்த திட்டம்.