கொரோனா காலத்திலும் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ததில் பெரும் பங்காற்றியது ஆன்லைன் வர்த்தகத் தளங்கள். அவற்றில் Amazon, Flipkart, Swiggy, Zomato போன்றவை தொடர்ந்து செயல்பட்டு வந்தன. நகர்ப்புறம் மட்டுமல்லாது கிராமங்களிலும் தனது பணியை செவ்வனே செய்தது இந்த நிறுவனங்கள். நாட்டின் ஒவ்வொரு கடைக்கோடியிலும் அறிமுகமாயிருக்கும் இந்த நிறுவனத்தில் வேலைக்கு சேர்வதில் பல இளைஞர்கள் ஆர்வத்துடன் முன்வருவார்கள்.

இதில் amazon நிறுவனம் இளைஞர்களுக்கு ஒரு அற்புத வாய்ப்பை ஏற்படுத்த உள்ளது. வரும் 2025ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் மட்டும் நேரடியாகவும் மறைமுகமாகவும் 20 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தருவதே அமேசானின் முக்கிய குறிக்கோள் என்று அந்நிறுவனம் கூறியுள்ளது. இதில், ஏற்கனவே 10 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுவிட்டது.

இந்நிலையில் இந்த ஆண்டு இந்தியாவில் 8000-க்கும் மேல் வேலைவாய்ப்பு வழங்க இருப்பதாக நேற்று இந்நிறுவனத்தின் மனித வள பிரிவு தலைவர் தீப்தி வர்மா பிடிஐ அவர்கள் தெரிவித்தார். இந்தியாவில் 35 நகரங்களில் தொழில்நுட்பம், வாடிக்கையாளர் சேவை, அலுவலகப் பணி, அன்றாட செயல்பாடு உள்ளிட்ட பல முக்கியமான பிரிவுகளில் இந்த வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது.

அனைத்து தேர்வு பணிகளும் காணொளி வாயிலாகவே நடைபெறுகிறது. வாய்ப்புகள் கிடைக்கும்போது பயன்படுத்திக்கொள்ளும் இளைஞர்கள் முன்னேற்றத்தின் எந்த ஒரு படியையும் தவறவிடுவதில்லை.