சமீபத்தில் சுமார் 21,000 கோடி அளவிலான முதலீடு திரட்டும் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது ஏர்டெல் நிர்வாகம். பங்கு விற்பனை, பத்திர வெளியீடு என அனைத்து விதங்களிலும் இந்த முதலீட்டை திரட்டும் முயற்சி முடுக்கிவிடப்பட்டது. நம் நாட்டில் அதிகளவிலான ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை வைத்துள்ள நிறுவனங்களில் முதல் இடம் வகிப்பது ஏர்டெல்.

இந்நிறுவனம் 5G சேவையை மிக மலிவான விலையில் சந்தையில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. இது நடைமுறைபடுத்தப்பட்டால் இந்தியாவில் 5G மிகப்பெரிய வளர்ச்சி அடையும்.இந்த சூழ்நிலையில் ஏற்கனவே ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்துடன் சுமார் 34,000 கோடி ரூபாய் அளவில் முதலீடு செய்துள்ள கூகுள் நிறுவனம் இப்போது பாரதி ஏர்டெல் நிறுவனத்தில் முதலீடு செய்யவும் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது என செய்தி வெளியாகியுள்ளது.

இந்த முதலீட்டு மதிப்பு ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் கூகுள் செய்த முதலீட்டுக்கு இணையாகவோ அல்லது அதைவிட அதிகமாகவோ இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரூ.1.7 லட்சம் கோடி வரையில் கடன் சுமையில் இருக்கும் ஏர்டெல்லிற்கு கூகுள் நிறுவனத்தின் முதலீடு நல்லதொரு வாய்ப்பு. டிஜிட்டல் துறையில் இந்தியா மிகச்சிறந்த வளர்ச்சியை பெற்று வருவதால் டிஜிட்டல் துறையில் முன்னணியில் இருக்கும் கூகுள், மைக்ரோசாஃப்ட் போன்ற நிறுவனங்கள் இந்தியாவில் பெருமளவில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுகின்றனர்.

இந்தியாவில் Digitisation fund திட்டத்திற்குச் சுமார் 10 பில்லியன் டாலர் அளவிலான தொகையை கூகுள் நிறுவனம் ஒதுக்கீடு செய்துள்ளது. இந்தியாவின் அனைத்து தரப்பு மக்களும் இன்டர்நெட் சேவையை பெற வேண்டும், அதன் மூலம் தனது வர்த்தகமும், வருமானமும் பெருக வேண்டும் என்பதே கூகுள் நிறுவனத்தின் திட்டம்.