நடப்பு நிதியாண்டில் இந்தியாவிலிருந்து வெளிச்செல்லும் ஏற்றுமதி மதிப்பு $400 பில்லியனை தாண்டியுள்ளது எனத்தெரிகிறது. இந்நிலையில் இந்திய வர்த்தக அமைச்சகம் சேவைகள் மற்றும் தயாரிப்புகள் ஆகிய இரண்டின் ஏற்றுமதியையும் புதிய சந்தைகளில் இன்னும் வேகப்படுத்த “பிராண்ட் இந்தியா பிரச்சார” திட்டத்தை செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் மற்றும் சேவைகள் ஆகியவை இந்த பிரச்சாரம் மூலம் ஒரே குடையின் கீழ் செயல்படும்.

ஆரம்ப கட்டத்தில் இந்த பிரச்சாரம் விலை மதிப்பு மிக்க பொருட்களான ரத்தினங்கள், நகைகள், ஜவுளிபொருட்கள், டீ, காஃபி, நறுமணப்பொருட்கள் ஆகிய தோட்டபொருட்கள், கல்வி, சுகாதாரம், மருந்து மற்றும் பொறியியல் ஆகியவற்றில் தனது கவனத்தை செலுத்தும். மேலும் தரம், பாரம்பரியம், தொழில்நுட்பம், மதிப்பு மற்றும் புதுமை ஆகியவற்றையும் தன் முக்கிய பின்னணியாக கொண்டிருக்கும்.

IBEF அறக்கட்டளையின் பங்களிப்பு

IBEF வர்த்தகத் துறையால் நிறுவப்பட்ட ஒரு அறக்கட்டளை. வெளிநாடுகளில் உள்ள சந்தைகளில் ‘மேட் இன் இந்தியா’ லேபிளை மேம்படுத்துதல் மற்றும் சர்வதேச விழிப்புணர்வை உருவாக்குதல் மற்றும் இந்திய தயாரிப்புகள் மற்றும் சேவைகள் பற்றிய அறிவைப் பரப்புதல் ஆகியவற்றை தன் பிரதான நோக்கமாக கொண்டு பணியாற்றி வருகிறது இந்த அறக்கட்டளை.

“பிராண்ட் இந்தியா பிரச்சார” அணுகுமுறை

வாங்குவோர் மற்றும் நுகர்வோருக்கு ஏற்றுமதி குறித்த அனைத்து செய்திகளையும் உள்ளடக்கியதாக இருக்கும் இந்த பிரச்சார அணுகுமுறை. ஒவ்வொரு பொருளுக்கும் அனுகூலமான சந்தை விவரங்கள், இந்திய திறமை, பாரம்பரியம் மற்றும் நவீனம், டிஜிட்டல் சேனல்கள் மற்றும் சர்வதேச நிகழ்வுகள் மூலம் விளம்பர நிகழ்வுகள்ஆகியவற்றை அளிக்கும்.

ஒரே மாதிரியான லோகோ அடையாளத்தை உருவாக்குதல், திரைப்படங்கள், TVCகள், அச்சு விளம்பரங்கள், டிஜிட்டல் பேனர்கள் ஆகியவற்றின் வாயிலாக பிராண்டிங் படைப்புகளை உருவாக்குதல் ஆகிய விஷயங்கள் செய்வதற்கு ஒரு செயலாண்மை நிறுவனம் தேர்வு செய்யப்பட்டு அதில் “பிராண்டிங் ஸ்டீரிங் கமிட்டி” ஒன்றும் அமைக்கப்படும்.