தமிழகத்தில் புதிய அரசு பதவியேற்றதிலிருந்து பல்வேறு செயல் திட்டங்கள் முன்னேற்ற பாதையில் எடுத்து செல்லப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டின் அனைத்து துறைகளும் மிகத் தீவிரமாக முடுக்கி விடப்பட்டு முனைப்புடன் வளர்ச்சியை நோக்கி பயணிக்கிறது. அதில் மின்சாரத்துறையும் ஒன்று.

இந்நிலையில் தமிழக மின்வாரியம் அடுத்த 10 வருடங்களில் 20000 MW அளவுக்கு சூரிய மின் உற்பத்தியை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. ஆயத்த பணிகள் யாவும் தீவிரமாக நடந்து வருகிறது. தற்போதய நிலவரப்படி தமிழகத்தின் மொத்த மின்தேவை 13500 MW-க்கும் மேல். வீடுகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், விவசாயம், குடிசைகள், இதர என்று 3 கோடிக்கும் அதிகமான மின் இணைப்புகளை கொண்ட மாநிலமாக தமிழகம் உள்ளது. உயரழுத்த மின் பயனீட்டாளர்கள் 10000 தனி.

மின் உற்பத்தி நிலையங்கள்

நம் மின்சார தேவையை பூர்த்தி செய்ய காற்றாலை, அனல் மின் உற்பத்தி மையங்கள், சூரிய சக்தி, காஸ், நீர்மின் நிலையங்கள் போன்றவை பயன்பாட்டில் உள்ளன. இவற்றினால் மட்டும் நம் தேவையை முழுமையாக பூர்த்தி செய்வது இயலாது. ஆகவே மத்திய தொகுப்பில் இருந்தும், தனியாரிடம் இருந்தும் மின்சாரம் பெறுகிறோம்.

சூரிய மின்சக்தி பூங்காக்கள் அமைக்க திட்டம்

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மின் தேவையை பூர்த்தி செய்வதற்காக சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுத்தாத திட்டங்கள் செயலாக்கம் பெற வேண்டும் என்று கருதப்படுகிறது. அதன்படி அரசு அலுவலகங்களின் மேற்கூரையில் சூரிய மின்தகடுகளை அமைத்து மின் உற்பத்தியை அதிகரிக்க பணிகள் .நடக்கிறது. வயல்வெளிகளில் சூரிய மின்சக்தி மூலம் தாமாகவே மின்உற்பத்தி செய்து கொள்ளும் விவசாயிகளுக்கு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது மாவட்டம் தோறும் சூரிய மின்சக்தி பூங்கா அமைப்பதற்கான இடங்களை தேர்வு செய்ய பணிகளை தொடங்க செயற்பொறியாளர்களுக்கு மின்வாரியம் ஆணையிட்டுள்ளது. இதற்குரிய சுற்றறிக்கையை அனைத்து மின் பகிர்மான வட்ட கண்காணிப்புப் பொறியாளர்களுக்கு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் மரபுசாரா எரிசக்தி ஆதாரங்கள் பிரிவு தலைமைப் பொறியாளர் அனுப்பியுள்ளார்.

4000 MW திறனுள்ள சூரிய மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் 2000 MW திறனுள்ள மின்கலன் சேமிப்பு திட்டம் தொடங்க திட்டம்

இவ்வாறு சூரிய மின்சக்தி பூங்காக்கள் அமைப்பதால் தனியார் நிறுவனங்களிடமிருந்து அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்க வேண்டாம். இன்னும் 10 ஆண்டுகளில் 20000 MW மின்சாரம் உற்பத்தி செய்து தடையில்லா மின்சாரம் வழங்கலாம் என்று கருதப்படுகிறது.

முதல்கட்டமாக தமிழகத்தில் சுமார் 4000 MW திறனுள்ள சூரிய மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் 2000 MW திறனுள்ள மின்கலன் சேமிப்பு திட்டம் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பேரவையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.