நெல் விளையும் பூமியான தஞ்சை மாநகரத்தில் குறுவை நெற்பயிர்கள் அறுவடை முடிவுற்ற நிலையில் அங்கிருந்த வைக்கோல்கள் பிற மாவட்டங்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டன. விளைவு, இப்போது தஞ்சை மாநகர் முழுவதும் வைக்கோலுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. அறுவடை செய்த வைக்கோல்களை உட்கொள்ளும் மாடுகள் பால் சுரப்பது அதிகமாக இருக்கும். ஆகவே, தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி, கோயம்பத்தூர், திருப்பூர் என பல மாவட்டங்களிலிருந்தும் இங்கு வந்து வைக்கோல் வாங்கி செல்வது வழக்கம். அதே போல் பேப்பர், காளான் ஆகியவை தயாரிக்க இங்குள்ள வைக்கோல்கள் தரம் உயர்ந்ததாக உள்ளதால் அவர்களும் தஞ்சையில் தான் கொள்முதல் செய்கின்றனர். இவ்வாறு பல காரணங்களுக்காக வெளி மாவட்டங்களுக்கு வைக்கோல் விற்பனை செய்யப்பட்டதால் தங்கள் மாவட்டத்தில் தட்டுப்பாடு நிலை உருவாகச் செய்துள்ளனர் இம்மக்கள்.

தற்போது ஒரு வைக்கோல் கட்டின் விலை

சில மாதங்களுக்கு முன் ஒரு கட்டு வைக்கோல் ரூ.100-க்கு விற்கப்பட்டது. அதுவே இப்போது ரூ.300-க்கு விற்பனையாகிறது. வைக்கோல் வைத்திருப்பவர்கள் அதனை தார்பாய் போர்வை போர்த்தி பொக்கிஷம் போல் பாதுகாக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இறைச்சிக்காக கேரளாவுக்கு அனுப்பப்படும் மாடுகள்

இதன் மிகப்பெரிய பாதிப்பாக வைக்கோல் கிடைக்காததால் மாடுகள் போதுமான ஊட்டச்சத்தின்றி உடல் மெலிவுற்று காணப்படுகின்றன. கன்றுகளுக்கு பால் கிடைப்பதில்லை. பலர் மாடுகளை இறைச்சிக்காக கேரள மாநிலத்திற்கு விற்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.

தஞ்சாவூர், கும்பகோணம் மாவட்டங்களில் மாடுகள் ரோடுகளில் சுற்றித்திருந்தால் அவற்றின் உரிமையாளருக்கு மாவட்ட நிர்வாகம் அபராதம் விதிக்கும் என்று எச்சரிக்கை அமுலில் இருக்கிறது. இதனாலும் பல மாடுகள் கேரள மாநிலம் அனுப்பப்படுகின்றன. ஒரு வாரத்தில் ஏறக்குறைய 10-க்கும் மேல் லாரிகள் வந்து மாடுகளை ஏற்றிச்செல்கின்றன என்று தகவல் வந்துள்ளது.